/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துவக்கிய 4 மாதத்தில் கலியனுார் மேம்பால பணி பாதியில்... நிறுத்தம்! மாணவர்கள், விவசாயிகள் ஏணியில் ஏறி செல்லும் அவலம்
/
துவக்கிய 4 மாதத்தில் கலியனுார் மேம்பால பணி பாதியில்... நிறுத்தம்! மாணவர்கள், விவசாயிகள் ஏணியில் ஏறி செல்லும் அவலம்
துவக்கிய 4 மாதத்தில் கலியனுார் மேம்பால பணி பாதியில்... நிறுத்தம்! மாணவர்கள், விவசாயிகள் ஏணியில் ஏறி செல்லும் அவலம்
துவக்கிய 4 மாதத்தில் கலியனுார் மேம்பால பணி பாதியில்... நிறுத்தம்! மாணவர்கள், விவசாயிகள் ஏணியில் ஏறி செல்லும் அவலம்
ADDED : டிச 10, 2024 12:54 AM

திருவள்ளூர், டிச. 10- கொசஸ்தலை ஆற்றில், விடையூர் - கலியனுார் இணைப்பு பால பணி துவங்கிய நான்கே மாதங்களில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கலியனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ -- மாணவியர் மற்றும் விவசாயிகள், ஆபத்தான முறையில் ஏணியில் ஏறி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது கலியனுார் ஊராட்சி. இந்த கிராமத்திற்கும், கடம்பத்துார் ஒன்றியம், விடையூருக்கும் இடையே கொசஸ்தலை ஆறு குறுக்கிடுகிறது.
பருவமழை
கலியனுார், நெமிலி அகரம், குப்பம் கண்டிகை, மணவூர், ராஜபத்மாபுரம் உட்பட, 15 கிராமங்களைச் சேர்ந்தோர், அத்தியாவசிய பணிக்காக, தற்காலிக பாதை அமைத்து கொசஸ்தலை ஆற்றைக் கடந்து விடையூர் வந்து சென்றனர்.
மழை காலத்தில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, பெண்கள், பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்ட கிராமவாசிகள் எவரும் ஆற்றை கடக்க முடியாமல், திருவாலங்காடு, நாராயணபுரம் வழியாக, 25 கி.மீ., துாரம் பயணித்து திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, 3.60 கோடி ரூபாய் செலவில், கடந்த 2017 - 18ல், 144 மீட்டர் நீளம், 8.6 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால், இரண்டு கரையையும் மேம்பாலத்தால் இணைக்கப்படாமல், பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதாவது, விடையூர் பகுதியில் 50 அடி வரையும், கலியனுார் பகுதியில் 120 அடி வரையும் மேம்பாலத்துடன் கரைகள் இணைக்கப்படவில்லை. இதனால், கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக அரசு பணம் வீணாகியதுடன், மக்கள் பயன்பாட்டிற்கும் வராமல் உள்ளது.
கடந்த 2023 நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் சென்றதால், பொதுமக்கள், வழக்கம் போல் திருவாலங்காடு, நாராயணபுரம் சென்று திருவள்ளூர் வந்தனர்.
ஆனால், மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், விடையூர் வர 20 கி.மீ., துாரம் செல்ல வேண்டும்; இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, தண்ணீரில் நடந்து சென்று, பின் ஏணியை பயன்படுத்தி பாதியில் நிற்கும் மேம்பாலத்தில் ஏறி, பள்ளி சென்றனர்.
சிரமம்
இதையடுத்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, கடந்தாண்டு தற்காலிக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும், மழை காலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால், மாணவ - மாணவியர் சிரமப்பட நேரிடும்.
எனவே, பள்ளி மாணவ - மாணவியர் நலன் கருதி, பாதியில் நிற்கும் விடையூர் - கலியனுார் மேம்பாலத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், கூடுதல் நிதி கோரி, ஒருங்கிணைந்த ஊரக ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானிய திட்டத்தில், அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கிடப்பில்...
இதையடுத்து, தமிழக அரசு 3.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில், கடந்த ஜூலையில் மேம்பாலத்தை ஆற்றின் இரண்டு பகுதியிலும் இணைப்பு பணி துவங்கியது.
பணி துவங்கி நான்கு மாதம் வேகமாக நடந்து வந்தது. விடையூர் பகுதியில் பணி நிறைவடைந்ததும், கலியனுார் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ஆனால், ஒன்றரை மாதத்திற்கும் மேலாக, இப்பணி மீண்டும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறையினரிடம் கேட்டபோது, 'ஊருக்குச் சென்ற தொழிலாளர்கள் இதுவரை திரும்பாததால், பணி நடைபெறவில்லை' என தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் 'பெஞ்சல்' புயல் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவ - மாணவியர், விவசாயிகள் மீண்டும் ஏணியை பயன்படுத்தி ஆபத்தான முறையில் பாலத்தில் ஏறி, பயணிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், உடனடியாக பணியை விரைந்து முடித்து, பால பணியை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.