/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைப்பு
/
கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைப்பு
ADDED : ஜன 13, 2025 01:12 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை ஊராட்சியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம், 2015ம் ஆண்டு, முதல் முறையாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்தது. பின், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர்.
அதன் பின், 2019, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டு என, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்படுவதும் ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைப்பதும் வழக்கமானது.
இந்நிலையில், கனமழை காரணமாக, கடந்த டிசம்பரில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தரைப்பாலம் ஆறாவது முறையாக அடித்து செல்லப்பட்டது. இதனால் மணவூர் -- - பனப்பாக்கம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மணவூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளான கல்வி, வேலை, மருத்துவம் பார்க்க திருவள்ளூர் நகருக்கு செல்ல 10 கி.மீ., சுற்றிக் கொண்டு திருவாலங்காடு வழியாக, திருவள்ளூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, பனப்பாக்கம் மக்கள், திருத்தணி, அரக்கோணம் செல்ல, 12 கி.மீ., சுற்றிக் கொண்டு கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தரைப்பாலத்தை போக்குவரத்திற்கு சீரமைக்க வேண்டும்; அடுத்த ஆண்டு மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் உயர்மட்டபாலம் அமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஒன்றிய பொது நிதியில் இருந்து, 6 லட்சத்து, 50,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குப்பம்கண்டிகை கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் மீது உருளைகள் அமைத்து, மண் கொட்டி சீரமைக்கும் பணி பொக்லைன் இயந்திரம் வாயிலாக நடந்தது. இதையடுத்து தரைப்பாலம் வழியாக வாகனங்கள் சென்றன.