/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6வது முறையாக உடைந்த கொசஸ்தலை ஆற்று தரைப்பாலங்கள்: 40 கிராமத்தினர் 10 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் அவலம்
/
6வது முறையாக உடைந்த கொசஸ்தலை ஆற்று தரைப்பாலங்கள்: 40 கிராமத்தினர் 10 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் அவலம்
6வது முறையாக உடைந்த கொசஸ்தலை ஆற்று தரைப்பாலங்கள்: 40 கிராமத்தினர் 10 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் அவலம்
6வது முறையாக உடைந்த கொசஸ்தலை ஆற்று தரைப்பாலங்கள்: 40 கிராமத்தினர் 10 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் அவலம்
ADDED : டிச 04, 2024 01:56 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை மற்றும் எல்.வி.புரம் கிராமங்களில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலங்கள் வெள்ளப்பெருக்கால் ஆறாவது முறையாக உடைந்துள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40 கிராமத்தினர் அத்தியாவசிய தேவைகளுக்கு 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கொசஸ்தலையாற்றில் கலந்து, திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, பூண்டி ஒன்றியங்கள் வழியாக பாய்ந்து பூண்டி ஏரியை சென்றடைகின்றன.
கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மறு கரையில் உள்ள கிராமங்களுக்கு சென்றுவர ஆற்றின் குறுக்கே 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்மட்ட, தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம் கண்டிகை மற்றும் எல்.வி.புரம் கிராமங்களில் பாயும் கொசஸ்தலையாற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த இரு தரைப்பாலமும், 2015ம் ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்தது. பின்னர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர்.
அதன் பின், 2019, 2021, 2022, 2023ம் ஆண்டில் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்படுவது வழக்கமானது.
இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையால் நேற்று முன்தினம், இரவு 11:00 மணியளவில், கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தரைப்பாலம் ஆறாவது முறையாக உடைந்தது. இதனால் குப்பம்கண்டிகை -- செஞ்சிபனப்பாக்கம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், மணவூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 40 கிராமத்தினர் அத்தியாவசிய தேவைகளான கல்வி, வேலை, மருத்துவம் பார்க்க திருவள்ளூர் நகருக்கு செல்ல 10 கி.மீ., சுற்றிக் கொண்டு திருவாலங்காடு வழியாக திருவள்ளூர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று பனப்பாக்கம் மக்கள் திருத்தணி, அரக்கோணம் செல்ல, 12 கி.மீ., சுற்றிக்கண்டு கடம்பத்தூர் வழியாக பேரம்பாக்கம் சென்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று எல்.வி.புரம் தரைப்பாலமும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்ததால், எல்.வி.புரம் - மணவூருக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 6 கி.மீ., தூரம் சுற்றிச்சென்று பாகசாலை வழியாக மணவூர் செல்கின்றனர்.
இரண்டு தரைப்பாலமும் 5 முறை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக 1.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தரைப்பாலம் உடையும் போதெல்லாம் திருவள்ளூர் கலெக்டர், எம்.எல்.ஏ., வந்து பார்வையிடுவது வாடிக்கையாக உள்ளது.