/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடை தாகத்தை தீர்க்க தமிழகம் வந்த கிருஷ்ணா நீர்
/
கோடை தாகத்தை தீர்க்க தமிழகம் வந்த கிருஷ்ணா நீர்
ADDED : மார் 29, 2025 02:29 AM

ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
இதனால், தெலுங்கு கங்கை திட்டப்படி, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 25ம் தேதி காலை 11:30 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 500 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
அங்கிருந்து, 152 கி.மீ., பயணித்து, நேற்று காலை 9:30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை அடைந்தது. அப்போது, தமிழக நீர்வள ஆதாரத்துறை (கிருஷ்ணா நீர்) உதவி பொறியாளர் சதீஷ்குமார், ஆந்திர மாநில செயற்பொறியாளர் ரத்னா ரெட்டி, துணை செயற்பொறியாளர் ஸ்ரீஹரி உள்ளிட்டோர் மலர் துாவி, கிருஷ்ணா நீரை வரவேற்றனர்.
இதுகுறித்து ஆந்திர அதிகாரி ரத்னா ரெட்டி கூறியதாவது:
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி திருப்பதியின் குடிநீர் தேவை, ஆந்திர மாநில விவசாயத்திற்கு போக, மீதமுள்ள தண்ணீர் தமிழகம் வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு, 52 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
காளஹஸ்தி அருகே கால்வாய் வேலை நடக்கிறது. அடுத்த மூன்று நாட்களில் பணிகள் முடிக்கப்படும். பின், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.