/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் கிருஷ்ணா நீர் தேங்குவதில்...சிக்கல்!:ஷட்டர் சீரமைப்பு பணிகள் அரைகுறை
/
பூண்டியில் கிருஷ்ணா நீர் தேங்குவதில்...சிக்கல்!:ஷட்டர் சீரமைப்பு பணிகள் அரைகுறை
பூண்டியில் கிருஷ்ணா நீர் தேங்குவதில்...சிக்கல்!:ஷட்டர் சீரமைப்பு பணிகள் அரைகுறை
பூண்டியில் கிருஷ்ணா நீர் தேங்குவதில்...சிக்கல்!:ஷட்டர் சீரமைப்பு பணிகள் அரைகுறை
ADDED : செப் 25, 2024 01:08 AM

திருவள்ளூர்:பூண்டி நீர்தேக்கத்தில் நடைபெற்று வரும், ஷட்டர் சீரமைப்பு பணி அரைகுறையாக உள்ள நிலையில், தற்போது கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணா நீர் நீர்தேக்கத்தில் தேங்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகில், கொசஸ்தலை ஆற்றின் நடுவில் நீர்தேக்கப்பட்டு உள்ளது. இங்கு, ஆந்திர மாநிலம், அம்மபள்ளி நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், பள்ளிப்பட்டு, வெளியகரம், நகரி, திருத்தணி, பட்டரைபெரும்புதுார் வழியாக பூண்டியை கடந்து, எண்ணுார் அருகில் கடலில் கலக்கிறது.
அதே போல், கர்நாடக மாநிலம் பாலாற்றில் இருந்து வரும் உபரி நீர், கடம்பத்துார் ஒன்றியம் கூவம் அருகில் பிரிந்து, கடம்பத்துார், விடையூர், திருவாலங்காடு வழியாக பூண்டியை அடைகிறது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கொசஸ்தலை ஆற்றில் சேகரமாகும் குடிநீரை தேக்கி வைத்து, புழல், சோழவரம் ஏரிகளில் தேக்கி வைத்து, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரி நீர்தேக்கத்தில் 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. தண்ணீரை தேக்கி வைக்கலாம். மேலும், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். இந்த நீர், பூண்டி நீர்தேக்கத்தில் சேகரிக்கப்பட்டு, சென்னை நகருக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பூண்டி நீர்தேக்கத்தில், 16 ஷட்டர்கள் உள்ளன. நீர்தேக்கத்தில் மழை காலத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் வரும் நிலையில், உபரி நீர் வெளியேறும் வகையில், 16 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படும்.
நீர்தேக்கம் கட்டி, 77 ஆண்டுகள் கடந்த நிலையில், இங்குள்ள, அவசர கால நீர் வெளியேற்றும் 'ஷட்டர்கள்' பழதடைந்து விட்டன. இதை கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்த, பொதுப்பணி துறையினர், காலம்போன கடைசியில், வடகிழக்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரும் சமயத்தில், கடந்த மூன்று மாதத்திற்கு முன் ஷட்டர் சீரமைப்பு பணியை துவக்கினர்.
தற்போது, 16 ஷட்டர்களில் இதுவரை, 4 நான்கு மட்டுமே சீர்படுத்தப்பட்டு உள்ளன. மீதம் உள்ள, 12 ஷட்டர்கள் முழுதும் சீரடைக்கப்படாமல் உள்ளன. இங்குள்ள ஷட்டர் மற்றும் மணல் போக்கிகளை புதிதாக பொருத்துதல் மட்டுமின்றி, புதிதாக நீரளவை கிணறு அமைக்கும் பணிக்கு 9.48 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகளை நீர்வளத்துறையினர் ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பூண்டி நீர்தேக்கத்தில் உள்ள ஷட்டர்கள் கழற்றி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன், ஏரியின் பழைய ஷட்டர்களை சீரமைப்பதற்கும், மணல் போக்கிகளை புதிதாக பொருத்துவதற்கும் 2020ல், நீர்வளத் துறைக்கு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
அப்போது, மணல் போக்கிகள் புதிதாக பொருத்தப்படவில்லை. ஷட்டர் சீரமைப்பு மட்டுமே நடந்தது.
நிதி ஒதுக்கீடு செய்து, நான்கு ஆண்டுகளாகியும், ஷட்டர்கள் சீரமைப்பு பணியை மேற்கொள்ளாமல் பொதுப்பணி துறை அலட்சியம் காட்டியது.
இந்நிலையில், தற்போது மொத்தம் உள்ள 16 ஷட்டர்களில் 4 மட்டுமே முழுதும் சீரமைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள, 12 ஷட்டர்கள் சீரமைக்கப்படாத நிலையில், தற்போது கிருஷ்ணா நீர் வருகிறது. விரைவில், பருவமழை பெய்தால், தண்ணீர் இங்கு தேங்குமா என்ற சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.