/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணாபுரம் அணை திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்
/
கிருஷ்ணாபுரம் அணை திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்
கிருஷ்ணாபுரம் அணை திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்
கிருஷ்ணாபுரம் அணை திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்
ADDED : அக் 06, 2025 02:16 AM

பள்ளிப்பட்டு:ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணை திறக்கப்பட்டதால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அணை, நேற்று முன்தினம் நள்ளிரவு திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து வெளியேறும் நீர், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
நேற்று அதிகாலை 2:00 மணி முதல் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. இதனால், சொரக்காய்பேட்டை -- நெடியம் இடையே கொசஸ்தலை ஆற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் மற்றும் சாமந்தவாடா தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சேதமடைந்த நெடியம் தரைப்பாலம் மற்றும் சாமந்தவாடா தரைப்பாலத்தின் வழியாக, வெள்ள அபாயத்தை உணராமல் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
வருவாய் துறை மற்றும் போலீசார், தரைப்பாலங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும், வாகன ஓட்டிகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தற்போது தான் முதல்முறையாக கிருஷ்ணாபுரம் அணை திறக்கப்பட்டுள்ளது. வரும் டிச., வரை அவ்வப்போது அணை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருட்டப்பள்ளி அணை
ஆந்திராவின் நகரி அருகே, மலைக்குன்றுகளில் உருவாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியே, 65.20 கி.மீ., பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது. இதில், பிச்சாட்டூர் கிராமத்தில் ஆற்றின் நடுவே, ஆரணி ஆறு அணைக்கட்டு உள்ளது.
அதேபோல், சுருட்டப்பள்ளி கிராமத்தில் அணைக்கட்டு உள்ளது. இதன் உயரம் 10 அடி. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், அணைக்கட்டிற்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் ஆரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.