/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி ரயில் நிலைய மேம்பாடு பணிக்கு...கெடு!:வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
/
கும்மிடி ரயில் நிலைய மேம்பாடு பணிக்கு...கெடு!:வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
கும்மிடி ரயில் நிலைய மேம்பாடு பணிக்கு...கெடு!:வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
கும்மிடி ரயில் நிலைய மேம்பாடு பணிக்கு...கெடு!:வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க உத்தரவு
ADDED : டிச 08, 2024 03:01 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், சென்னை மண்டல ரயில் மேலாளர், நேற்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
மத்திய ரயில்வே துறை சார்பில், ‛அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை தரம் உயர்த்தல் மற்றும் நவீன மயமாக்குதல் பணிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரயில் பயணியரின் பயன்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தி நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை நகரமான கும்மிடிப்பூண்டியில் உள்ள ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும்.
கும்மிடிப்பூண்டி --- சென்னை சென்ட்ரல் இடையே தினசரி, 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி பல்லாயிரக்கணக்கான ரயில் பயணியர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், ரயில் பயணியர் வசிதிக்காக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில், கணினி முன் பதிவு மையம் இயங்கி வருகிறது.
‛அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் பைபாஸ் ஆகிய இரு பகுதிகளில் ரயில் நிலைய பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இரு பிரமாண்ட நுழைவாயில் கட்டடங்கள், மின்துாக்கி, நகரும் படிகள் வசதிகளுடன் நடைபாலங்கள், நான்கு 'பார்க்கிங்' வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன.
தவிர வணிக வளாகம், நவீன மயமான நடைமேடைகள், எலக்ட்ரானிக் திரைகள், உணவகங்கள், ரயில் பயணியர் ஓய்வு அறை, புதிய முன்பதிவு மையம், நவீன கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அதற்காக ரயில் நிலையத்தின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பில் இருந்த, 2.26 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது.
கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை, 2023ம் ஆண்டு, ஜூலை மாதம் நடந்தன. தொடர்ந்து, 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் தேதி, பாரத பிரதமர் நரேந்தர மோடி,, 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக அடிக்கல் நாட்டினார். அப்போது, 2024ம் ஆண்டு துவக்கத்தில் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என, சென்னை மண்டல ரயில்வே துறை சார்பில் தெரவிக்கப்ட்டது.
ஆனால், தற்போது, 50 சதவீத பணிகள் கூட முடிவு பெறாத நிலையில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று, சென்னை மண்டல ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈரியா தலைமையிலான ரயில்வே அலுவலர்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி மற்றும் பை--பாஸ் பகுதி கட்டுமான பணிகளின் நிலை, ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள், அதன் தற்போதைய நிலை, நிலுவையில் உள்ள பணிகள் எப்போது முடிக்கப்படும் என்பதை கேட்டறிந்தார். அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இது குறித்து, சென்னை மண்டல ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛பணிகள் வேகமெடுத்து முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். 2025ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும்' என தெரிவித்தார்.