/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலாளர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
/
தொழிலாளர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 05, 2025 09:32 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் கொதிகலன் வெடிப்பு, இரும்பு தீக்குழம்பு சிதறல், கன்வேயர் பெல்ட்டில் சிக்குவது என, அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இம்மாதம், 1ம் தேதி, புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, தொழிலாளர் உறவினருக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பேச்சு வாயிலாக தீர்வு காணப்பட்டது.
இந்த சம்பவத்தில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஏதும் இல்லாததால், தெளிவான விசாரணை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறினர். அதன் எதிரொலியாக, போலீசார் சார்பில் தொழிலாளர் பாதுகாப்பு மீதான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
திருமண மண்டபம் ஒன்றில் நடந்த கூட்டத்தில், 75க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அசோகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் முன்னிலை வகித்தார்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். அவர்கள் பணிபுரியும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் வேலை பார்க்கின்றனரா என்பதை அவ்வப்போது உறுதி செய்திட வேண்டும்.
தொழிலாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.