/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லேடி சிவசாமி பள்ளி மாவட்ட வாலிபாலில் அபாரம்
/
லேடி சிவசாமி பள்ளி மாவட்ட வாலிபாலில் அபாரம்
ADDED : நவ 21, 2024 02:47 AM

சென்னை,
பள்ளிகள் இடையிலான வாலிபால் போட்டியில், பெண்கள் பிரிவில், மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி அணி வீராங்கனையர், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில், தென்சென்னை வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள், சாந்தோம் பள்ளியில் நடந்து வருகிறது.
இதில், பெண்களுக்கான போட்டிகள், 17, 19 வயது பிரிவில் நடக்கிறது. இதில், 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் -அவுட் முறையில் நடக்கின்றன.
இதில், நேற்று முன்தினம் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி அணியை எதிர்த்து, கில் நகர் டி.ஏ.வி., பள்ளி அணி களமிறங்கியது.
போட்டியின் துவக்கம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லேடி சிவசாமி பள்ளி வீராங்கனையரின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், டி.ஏ.வி., பள்ளி அணியினர் திணறினர்.
இதனால், 25- - 8, 25- - 10 என்ற புள்ளிக் கணக்கில், லேடி சிவசாமி பள்ளி அணியினர் எளிதாக வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இதே வயது பிரிவின் மற்ற ஆட்டங்களில், அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர் பாரதாஸ் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
தவிர, 17 வயது பிரிவில், நுங்கம்பாக்கம் வித்யோதயா மற்றும் டி.ஏ.வி., பள்ளி அணிகள் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தேர்வாகின. போட்டிகள் தொடர்கின்றன.