/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழையால் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியது காளஞ்சியில் கடல்நீரில் அரித்து செல்லப்பட்ட சாலை

ADDED : நவ 30, 2024 11:56 PM

பொன்னேரி:பெஞ்சல் புயல் காரணமாக, இரு நாட்களாக பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், இடைவிடாத மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. உபரிநீர் ரெட்டிப்பாளையம் தடுப்பணையை நோக்கி ஆர்ப்பரித்து செல்கிறது.
பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து பாதித்தது. பழவேற்காடு, கோளூர், தேவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் திருவாயற்பாடியில் இருந்து சென்று வந்தன.
பயணியர் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் தத்தளித்து சென்று, பேருந்துகளில் பயணித்தனர். பொன்னேரி அரிஅரன் பஜார், புதிய தேரடி சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்தது.
பொன்னேரி மின்வாரிய அலுவலக வளாகத்தில் மழைநீர் புகுந்ததால், மோட்டார் உதவியுடன் அவற்றை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சாலை சேதம்
பழவேற்காடு - காட்டுப்பள்ளி சாலையில் உள்ள காளஞ்சி கிராமத்தில் கடல்நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை முழுதும் சேதம் அடைந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
கோரைக்குப்பம் மீனவ கிராமம், பழவேற்காடு கடற்கரை பகுதியின் அருகில் இருப்பதால், அங்குள்ள மக்கள் அச்சத்துடன் இருந்தனர். படகுகள் டிராக்டர் உதவியுடன் கரையில் கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.