/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்சிப்பொருளான அறுவை சிகிச்சை மையம் தரம் உயர்த்தியும் பலனில்லை என புலம்பல்
/
காட்சிப்பொருளான அறுவை சிகிச்சை மையம் தரம் உயர்த்தியும் பலனில்லை என புலம்பல்
காட்சிப்பொருளான அறுவை சிகிச்சை மையம் தரம் உயர்த்தியும் பலனில்லை என புலம்பல்
காட்சிப்பொருளான அறுவை சிகிச்சை மையம் தரம் உயர்த்தியும் பலனில்லை என புலம்பல்
ADDED : மார் 20, 2025 02:42 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இங்கு, திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், வியாசபுரம், பெரியகளக்காட்டூர் உட்பட 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 60 கிராமவாசிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ஒருநாளைக்கு கர்ப்பிணியர், வெளிநோயாளிகள் என, 300க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, ஆண்டுக்கு சராசரியாக 140 பேருக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.
எனவே, இங்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம் அமைத்து, சுகாதார நிலையத்தை படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக உயர்த்த அரசு உத்தவிட்டது. அதன்படி, 2019ம் ஆண்டு 1.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், 30 படுக்கை வசதி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மைய கட்டடம், 2021ல் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தியும், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு மக்கள் கூறியதாவது:
திருவாலங்காடு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. இங்கு, குழந்தை பிறக்க சிறிய அளவிலான பிரச்னை இருந்தாலே, உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்வது வழக்கம்.
ஆனால், அதற்கான அறை இருந்தும் சிகிச்சை மேற்கொள்வதில்லை. இதனால், 45 நாட்களுக்கு பின் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால், இரண்டு வலியை தாங்க வேண்டிய நிலைக்கு கர்ப்பிணியர் தள்ளப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், 8 - ---15 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. வரும் காலத்தில் கர்ப்பிணியருக்கு சிரமம் இல்லாத வகையில், திருவாலங்காடில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.