/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிரில் இலை கருகல் நோய் பொன்னேரி விவசாயிகள் கவலை
/
நெற்பயிரில் இலை கருகல் நோய் பொன்னேரி விவசாயிகள் கவலை
நெற்பயிரில் இலை கருகல் நோய் பொன்னேரி விவசாயிகள் கவலை
நெற்பயிரில் இலை கருகல் நோய் பொன்னேரி விவசாயிகள் கவலை
ADDED : ஆக 10, 2025 12:44 AM

பொன்னேரி:சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிரில், இலை கருகல் நோய் பரவி வருவதால், பொன்னேரி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு, 14,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வந்த நிலையில், சில தினங்களாக அவற்றில், இலை கருகல் நோய் பாதிப்பு துவங்கி உள்ளது.
இந்த நோய் தாக்கிய நெற்பயிர் இலைகளின் நுனிப்பகுதி மஞ்சளாக மாறி, அது இலை முழுதும் பரவுகிறது. பின், அடுத்தடுத்த பயிருக்கு வேகமாக பரவி பாதிப்புகளை அதிகரிக்கிறது.
இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர் மஞ்சளாக காணப்படுகிறது. விவசாயிகள், பல்வேறு மருந்துகளை தெளித்தும், கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
ஆவூர், பனப்பாக்கம், குமரஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்த இலை கருகல் நோய் பாதிப்பால், பொன்னேரி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
நெற்பயிர் திடீரென மஞ்சளாக மாறி வருகிறது. மருந்துகளுக்காக, ஏக்கருக்கு 5,000 ரூபாய் வரை செலவிட்டும், பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கதிர்விடும் நேரத்தில் இந்த பாதிப்பு துவங்கி உள்ளதால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கும்.
பாதிப்பில் இருந்து பயிர்கள் மீண்டாலும், எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'நோய் பாதிப்பு இருப்பது குறித்து, வேளாண் துறையை தொடர்பு கொள்ளும் விவசாயிகளுக்கு, உரிய மருந்து ஆலோசனைகள் வழங்கப்படும்' என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.