/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எம்-- சாண்ட் லோடு லாரிகளை அனுமதிக்க டிப்பர் உரிமையாளர்கள் முறையீடு
/
எம்-- சாண்ட் லோடு லாரிகளை அனுமதிக்க டிப்பர் உரிமையாளர்கள் முறையீடு
எம்-- சாண்ட் லோடு லாரிகளை அனுமதிக்க டிப்பர் உரிமையாளர்கள் முறையீடு
எம்-- சாண்ட் லோடு லாரிகளை அனுமதிக்க டிப்பர் உரிமையாளர்கள் முறையீடு
ADDED : செப் 23, 2024 12:29 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், 450க்கும் மேற்பட்ட எம்- சாண்ட், ஜல்லி டிப்பர் லாரிகள் இயக்கப்படுகின்றன. அவை ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் இருந்து எம்சாண்ட், ஜல்லி ஏற்றி வந்து தமிழக பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழக உற்பத்தியாளர்களிடம் எம்- சாண்ட், ஜல்லி வாங்குவதற்கும் ஆந்திர மாநிலத்தில் வாங்குவதற்கும் லோடு ஒன்றுக்கு 4500 முதல் 6000 ரூபாய் வரை குறைவு என்பதால், வருவாய்க்காக லாரி ஓட்டுனர்களும் சொந்தமாக லாரி வாங்கி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த 20 நாட்களாக கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் மற்றும் பொம்மாஜிகுளம் எல்லையோர போலீஸ் சோதனைச்சாவடிகளில் ஆந்திராவில் இருந்து வரும் எம்- சாண்ட் மற்றும் ஜல்லி லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், வருவாய் இழந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். குறிப்பாக வாங்கிய லாரிகளுக்கு மாத தவனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில், டிப்பர் லாரி உரிமையாளர்கள், 50 பேர் எளாவூர் சோதனைச்சாவடிக்கு சென்றனர். அங்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அண்ணாதுரை, கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகனை சந்தித்து பேசினர்.
ஆந்திராவில் இருந்து முறையாக ஜி.எஸ்.டி., பில் பெற்று எம் - சாண்ட், ஜல்லி ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை தமிழக சோதனைச்சாவடிகளில் அனுமதிக்க வேண்டும் என முறையிட்டனர். உடனடியாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்துடன் ஆலோசித்த பின் எம் - சாண்ட், ஜல்லி லாரிகள் அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பின் டிப்பர் லாரி உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விளக்கம்
எம்சாண்ட், ஜல்லி லாரிகளுக்கு அனுமதி மறுத்ததற்கான காரணம் குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்கள் எம் - சாண்ட் உற்பத்தி நிலையம் நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு எம்- சாண்ட் ஏற்றி வருவதை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். எம் - சாண்ட் லாரிகளுக்கு மட்டும் தடை விதித்தால் சந்தேகம் வரும் என்பதால் ஜல்லி லாரிகளையும் சேர்த்து நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கலாம்' என்றனர்.