/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி
/
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி
ADDED : டிச 08, 2025 06:30 AM

பள்ளிப்பட்டு: கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள ஆடு, மாடுகளுக்கான குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை கால்நடை மருந்தகம், பொதட்டூர்பேட்டை அடுத்த காக்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்திற்கு, பொதட்டூர்பேட்டை, காக்களூர், ராமாபுரம், நாகிரெட்டிபள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக, கால்நடைகளை ஓட்டி வருகின்றனர்.
கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, இந்த கால்நடை மருந்தக வளாகத்தில் நிலத்தடி குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர்தொட்டி மூடி அகற்றப்பட்டுள்ளது.
மதிய நேரத்திற்கு பின் கால்நடை மருந்தகங்கள் பூட்டிக்கிடக்கும் நேரத்தில், மதுபிரியர்கள் குடிநீர் தொட்டி அருகே அமர்ந்து மது அருந்துகின்றனர். காலி மதுபாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் குடிநீர் தொட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர்.
இதே போல், நொச்சிலி கால்நடை மருந்தக வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் வசதி இருந்தும் குடிநீர் நிரப்பப்படாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளது. இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

