/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரிகள் பராமரிப்பு: மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
/
ஏரிகள் பராமரிப்பு: மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
ADDED : செப் 22, 2024 12:17 AM
திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டத்தில், பொதுப்பணித்துறையின் ஒரு பிரிவான திருத்தணி நீர்வளத்துறையினர், மொத்தம் 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர்.
இந்த துறையினர் ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய், கடைவாசல் சீரமைத்தல் மற்றும் பழுதாகி வரும் ஏரியின் மதகுகளையும் சீரமைத்து வருகின்றனர்.
இதுதவிர நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும், ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்கவும், கொசஸ்தலை மற்றும் நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது போன்ற பணிகளையும் மேற்கொள்வர்.
மூன்று ஆண்டுகளாக, இந்த ஏரிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதனால், பெரும்பாலான ஏரிகளின் மதகுகள் பழுது மற்றும் நீர்வரத்து கால்வாய் புதைந்து முட்செடிகள் வளர்ந்துள்ளன.
திருத்தணி நீர்வளத்துறையினர் நிதி இல்லாததால், பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
இதனால், அடுத்த மாதம் துவங்கி, வரும் டிசம்பர் மாதம் வரை பெய்யவுள்ள வடகிழக்கு பருவ மழை தண்ணீரை ஏரிகளில் சேமிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டது.
காரணம் மதகு பழுதாகியுள்ளதால் ஏரியில் தேங்கும் மழைநீர் வீணாக வெளியேறும். அதே போல் நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு பணிகள் செய்யாததால் ஏரிக்கு மழைநீர் வருவதிலும் சிக்கல் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஏரிகள் பராமரிப்பதற்கு போதிய நிதியுதவி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
திருத்தணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கூறுகையில், ''ஏரிகள் சீரமைப்பு பணிகளுக்கு கடந்த ஒன்றரை வருடத்தில், ஒரு கோடி ரூபாய் கூட முழுமையாக நிதி ஒதுக்கீடு இல்லை.
''ஆகையால், ஏரிகள் பராமரிப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளன. அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் ஏரிகள் பழுது பார்க்கும் பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.