/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நண்பரை கொன்றவர் கூட்டாளி ஐவருடன் கைது
/
நண்பரை கொன்றவர் கூட்டாளி ஐவருடன் கைது
ADDED : செப் 04, 2025 09:45 PM
பொன்னேரி:பொன்னேரியில் கள்ளத்தொடர்பால் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பர் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ், 27. கட்டட தொழிலாளியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த, 1ம் தேதி இரவு, பொன்னேரி, ஆரணி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாடு பகுதியில், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பொன்னேரி பகுதியை சேர்ந்த சிவா, 24 என்பவரும், விமல்ராஜூம் நண்பர்கள். சிவாவின் வீட்டிற்கு விமல்ராஜ் அடிக்கடி செல்லும்போது, அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இது சிவாவிற்கு தெரிந்து ஆத்திரமடைந்தார்.
கடந்த, 1ம்தேதி, விமல்ராஜை பொன்னேரிக்கு வரவழைத்தார். ஆள்நடமாட்டம் இல்லாத ஆரணி ஆற்று, சுடுகாடு பகுதிக்கு சென்று, இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, சிவாவுடன் சில நண்பர்களும் வந்திருந்தனர்.
போதையில் இருந்த விமல்ராஜை, சிவாவும், அவரது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது, விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சிவா, 24, லட்சுமிகாந்தன், 32, விஜய், 26, விக்னேஷ், 25, சென்னை வண்டலுாரை சேர்ந்த பிரவின், 25, ஆகியோரை, பொன்னேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.