/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநெல்லுார் சிப்காட் நான்கு வழிச்சாலை பணி...கிடப்பில்!:நில எடுப்பு பணி தாமதத்தால் தொடர் இழுபறி
/
மாநெல்லுார் சிப்காட் நான்கு வழிச்சாலை பணி...கிடப்பில்!:நில எடுப்பு பணி தாமதத்தால் தொடர் இழுபறி
மாநெல்லுார் சிப்காட் நான்கு வழிச்சாலை பணி...கிடப்பில்!:நில எடுப்பு பணி தாமதத்தால் தொடர் இழுபறி
மாநெல்லுார் சிப்காட் நான்கு வழிச்சாலை பணி...கிடப்பில்!:நில எடுப்பு பணி தாமதத்தால் தொடர் இழுபறி
ADDED : ஆக 05, 2024 02:24 AM

கும்மிடிப்பூண்டி:மாநெல்லுார் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு, 54.41 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதற்கான நில எடுப்பு பணி முழுமை பெறாததால், இரு ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய இரு சிப்காட் வளாகங்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டியை தொடர்ந்து, 1,127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்ட தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம் முழுதும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்டது.
தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தற்போது இடம் இல்லாத காரணத்தால், அரசு புறம்போக்கு நிலங்கள் அதிக அளவில் உள்ள மாதர்பாக்கம் பகுதியில் புதியதாக மாநெல்லுார் சிப்காட் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, 1,800 ஏக்கர் பரப்பளவில், மாநெல்லுார் சிப்காட் வளாகம் வர இருக்கிறது.
தேர்வாய் கண்டிகை மற்றும் மாநெல்லுார் ஆகிய இரு சிப்காட் வளாகங்களையும் இணைக்கும் நோக்கில் புதிய நான்கு வழிச்சாலை ஏற்படுத்த சிப்காட் நிர்வாகம் முடிவு செய்தது.
குறிப்பாக, சென்னையில் இருந்து கவரைப்பேட்டை --- சத்தியவேடு சாலை வழியாக எளிதில் மாநெல்லுார் சிப்காட் வளாகத்தை அடையும் வகையில் அந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என சிப்காட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
புதிய நான்கு வழிச்சாலை
அதன்படி, கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், 14வது கி.மீட்டரில் உள்ள தாணிப்பூண்டி சந்திப்பில் இருந்து வாணியமல்லி கிராமம் வழியாக, கும்மிடிப்பூண்டி--- மாதர்பாக்கம் சாலையில், 12வது கி.மீட்டரில் உள்ள அல்லிப்பூ குளம் சந்திப்பு சாலை வரை, 4.1 கி.மீ., நீளத்திற்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக, சிப்காட் நிர்வாகம் சார்பில், 54.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
சென்டர்மீடியனுடன், 15 மீட்டர் அகல சாலை அமைக்க, பெரும்பகுதி இடம், அரசு புறம்போக்கு மற்றும் மாநெல்லுார் சிப்காட் வளாகத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்டன.
அவற்றுடன் சிறிய பகுதியாக, வாணியமல்லி கிராமத்தில், 3.3 ஏக்கர் விவசாய நிலங்கள் எடுக்கப்படும் என கூறப்பட்டது.
கடந்த, 2022ம் ஆண்டு ஜூனில், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை துவங்கினர். பதினோறு மாதங்களில் சாலை பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஒன்றரை கி.மீ., சாலை மட்டுமே போடப்பட்டுள்ளது.
நில எடுப்பு பணிகள் முழுமை பெறாததால் சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாணியமல்லி கிராமத்திற்கு உட்பட்ட, 3.3 ஏக்கர் விவசாய நிலங்கள் இன்னும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட நில எடுப்பு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், வாணியமல்லி கிராமத்திற்கு உட்பட்ட பட்டாதாரர்களுக்கு இழப்பீடு தொகை நிர்ணயம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
விரைவில் இழப்பீடு தொகை வழங்கி, நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த இரு மாத காலத்திற்குள் நான்கு வழிச்சாலைக்கான நிலங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படும்' என தெரிவித்தார்.