/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாறம்பேடு சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
மாறம்பேடு சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : செப் 08, 2025 01:39 AM

சோழவரம்:கனரக வாகனங்கள் மற்றும் மண் லாரிகளால், பூதுார் - மாறம்பேடு சாலை சேதமடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
சோழவரம் அடுத்த பூதுாரில் இருந்து, மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் உள்ள மாறம்பேடு பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் சிக்கி, கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
பள்ளங்களை தவிர்க்க இடது, வலது என மாறி பயணிக்கும்போது, எதிரே வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன.
இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன.
மேலும், மாறம்பேடு ஏரியில் குவாரி என்ற பெயரில், லாரிகளில் சவுடு மண் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதனால், சாலை சேதமடைந்து வருகிறது.
எனவே, இச்சாலையை புதுப்பிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.