ADDED : அக் 24, 2025 12:20 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நீர் நிலையில் மருத்துவ கழிவுகள் கொட்டபட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் உள்ள தாமரை குளம் நிரம்பி, ரெட்டம்பேடு சாலை, ஆத்துப்பாக்கம் வழியாக உபரி நீர் கால்வாயில் சென்று, பின் வயல் வெளிகளில் பாய்ந்து, சோழியம் பாக்கம் ஏரியை சென்றடைகிறது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையில், கால்வாயில் உபரி நீர் மற்றும் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் வடிந்து செல்கிறது.
அந்த கால்வாயில், தேர்வழி கிராமத்திற்கு உட்பட்ட நேதாஜி நகர், பிரித்வி நகர் பகுதிக்கான சுடுகாடு எதிரே மதகு ஒன்று உள்ளது. அங்கு, ஏராளமான மருந்து, மாத்திரை உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் மிதக்கின்றன.
கால்நடை மற்றும் விவசாய பயன்பாட்டில் உள்ள நீர் நிலையில், மர்ம நபர்களால், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சுகாதார துறையினர் உடனடியாக அந்த மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தி உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீர்நிலையில் மருத்துவ கழிவுகளை குவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

