/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சர்க்கரை ஆலையை மேம்படுத்துவதில் இழுப்பறி காற்றில் பறக்கும் அமைச்சர்கள் வாக்குறுதி
/
திருத்தணி சர்க்கரை ஆலையை மேம்படுத்துவதில் இழுப்பறி காற்றில் பறக்கும் அமைச்சர்கள் வாக்குறுதி
திருத்தணி சர்க்கரை ஆலையை மேம்படுத்துவதில் இழுப்பறி காற்றில் பறக்கும் அமைச்சர்கள் வாக்குறுதி
திருத்தணி சர்க்கரை ஆலையை மேம்படுத்துவதில் இழுப்பறி காற்றில் பறக்கும் அமைச்சர்கள் வாக்குறுதி
ADDED : பிப் 08, 2025 01:35 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு, அரக்கோணம், சாலை, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய ஏழு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைத்து அரவை செய்யப்படுகிறது.
இதற்காக, ஏழு கோட்டங்களில், 2,100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து, 7,355 ஏக்கர் பரப்பில், பயிரிடப்பட்ட கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 2024 -- --25ம் ஆண்டுக்கான கரும்பு அரவை இலக்காக, 20 கோடி கிலோ, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.
கரும்பு அரவை கடந்தாண்டு நவம்பர் இறுதியில் துவங்கி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன், ஆலையில் நிறுவப்பட்ட இயந்திரம் வாயிலாக, கரும்பு தற்போதும் அரைக்கப்படுவதால், ஆரம்பத்தில் 27 லட்சம் கிலோ அரைத்த இயந்திரம், 10 ஆண்டுகளாக, 15 லட்சம் கிலோவில் இருந்து 17 லட்சம் கிலோ வரையில் தான் அரைக்கிறது.
இதனால், ஏழு கோட்டங்களில் இருந்து விளையும் சுமார் 60 கோடி கிலோ கரும்பில் வெறும் 18 கோடி கிலோ முதல் 22 கோடி கிலோ மட்டுமே அரைக்க முடிகிறது.
இதனால், ஆண்டுக்கு 35 கோடி கிலோவிற்கும் மேற்பட்ட கரும்புகள் தனியார் ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
எனவே, ஆலையில் உள்ள இயந்திரத்தை மாற்றி, புது இயந்திரத்தை அமைக்க வேண்டும் ஆலையை மேம்படுத்த வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆலையில் கரும்பு அரவையை துவக்கி வைக்க வரும்போதும் ஆலையை ஆய்வு செய்ய வரும்போதும் அமைச்சர்கள் ஆலையை மேம்படுத்துவது உறுதியென கூறி செல்வதும் பின்னர் அதனை கண்டுக்கொள்ளாததும் வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த கரும்பு விவசாயி என்.ஸ்ரீநாத், 42, கூறியதாவது:
இரண்டு அரவை பருவத்தில் அரவை இலக்கு 27 கோடி, 50 லட்சம் கிலோ மற்றும் 22 கோடி 50 லட்சம் கிலோவாக இருந்தது. தற்போது 20 கோடி கிலோவாக குறைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 40 ஆண்டுகள் பழமையான இயந்திரத்தால் சர்க்கரை ஆலையை நம்பி கரும்பை பயிரிடும் விவசாயிகள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
ஆலையில் குறைந்தது, 40 கோடி கிலோ கரும்பை அரைத்தால் தான் லாபத்தில் இயங்கும். எனவே, கூடுதல் கரும்பை அரைக்க ஆலையை நவீன மயமாக்குவது மட்டுமே தீர்வு. முந்தைய ஆண்டு சர்க்கரை ஆலை அரவையை துவக்கி வைக்க கைத்தறி துறை அமைச்சர் காந்தி வந்தார்.
கடந்த முறை சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் நாசர் வந்தார். பின்னர் ஆய்வுக்காக சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் வந்தார்.
அனைவரிடத்திலும் கோரிக்கை வைத்துள்ளோம். அவர்களும் மேம்படுத்துவது உறுதியென கூறி செல்கின்றனர். பின் கண்டுக்கொள்வதில்லை.
அமைச்சர்களின் வாக்குறதி காற்றில் பறக்கிறது. ஆலையை மேம்படுத்துவதற்கான எதிர்ப்பார்ப்பு கானல் நீர் போலாகி உள்ளது. இந்தாண்டாவது ஆலைக்கும் விவசாயிகளுக்கும் விடிவு காலம் வருமா ஆலை மேம்படுத்தப்படுமா என, காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆலையை மேம்படுத்த 158 கோடி ரூபாய் வேண்டி முன்மொழிவு சர்க்கரை துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் வாயிலாக நிதித் துறையிடம் கோப்புகள் சென்றுள்ளன. விரைவில் அதற்கான ஆணை கிடைத்த பின், ஆலை நவீனபடுத்தப்படும்' என்றார்.