UPDATED : நவ 28, 2026 06:16 PM
ADDED : நவ 28, 2026 06:16 PM
ஆவடி: ஆவடி பருத்திப்பட்டில் 800 சதுர மீட்டர் பரப்பில் மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் அம்பிகா ஜெயின் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சியின் 33வது வார்டுக்கு உட்பட்ட பருத்திப்பட்டி, நாராயணபுரம் குடியிருப்பு மனைப்பிரிவு பூங்காவில், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் மியாவாக்கி குறுங்காடு அமைக்கப்பட உள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகளை, மாநகராட்சி கமிஷனர் அம்பிகா ஜெயின் நேற்று மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இங்கு பல்வேறு வகையான பூச்செடிகள், காற்றை சுத்திகரித்து சுற்றுப்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகை மரங்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இப்பணிகள் நான்கு நாட்கள் நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
