/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊராட்சிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு நிதி குறைப்பு? சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு
/
ஊராட்சிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு நிதி குறைப்பு? சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு
ஊராட்சிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு நிதி குறைப்பு? சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு
ஊராட்சிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு நிதி குறைப்பு? சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பு
ADDED : ஜூலை 27, 2025 09:46 PM
திருவாலங்காடு:மக்கள் தொகை அடிப்படையில், ஊராட்சி வாரியாக மாதாந்திர பராமரிப்பு நிதி (எஸ்.எப்.சி.,) வழங்கப்படுகிறது. இந்த நிதி குறைக்கப்பட்டுள்ளதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் அரசு தவிப்பதாக புலம்புகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, மீஞ்சூர், கடம்பத்துார், திருவாலங்காடு, புழல் உட்பட 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளுக்கான குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம், அலுவலக செலவுகள் உட்பட பல்வேறு இனங்களுக்கான நிதி, ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கி வருகிறது.
மாநில நிதிக்குழு நிதியில் இருந்து இத்தொகை வழங்கப்படும். ஊராட்சிகளின் மக்கள் தொகையை பொறுத்து, ஊருக்கு ஊர் வேறுபடும் என்றாலும், ஓராண்டுக்கு முன் பெரிய ஊராட்சிகளுக்கு, மாதம் 2 லட்சம் ரூபாய் வரை அரசு வழங்கியது.
கடந்தாண்டு, 1.60 லட்சம் ரூபாயாக குறைந்தது. தற்போது, இத்தொகையானது 60,000 ரூபாய் என்ற அளவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சிறிய ஊராட்சிகளுக்கு, 10,000 - 20,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஊராட்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கி வருவதாக ஊழியர்கள் குமுறுகின்றனர்.
மேலும், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிதியை குறைத்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. எனவே, முன்பு போல் பராமரிப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தற்காலிக ஆப்பரேட்டர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத நிலையில், அவர்கள் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர்.
பராமரிப்பு நிதியை குறைத்ததால் குடிநீர் மோட்டார், பைப்லைன், தெருவிளக்கு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
தற்போது, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை, மணவூர் போன்ற பெரிய ஊராட்சிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு நிதி, 2 லட்சத்தில் இருந்து, 60,000 ரூபாயாக குறைந்துள்ளது.
இதனால், ஊராட்சியின் அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடைச் சேர்ந்த ஊழியர் கூறியதாவது:
குடிநீர் ஆப்பரேட்டராக 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஊராட்சி தலைவர் பதவிக்காலம் இருந்தவரை, சரியான நேரத்தில் சம்பளம் வந்துவிடும். மூன்று மாதங்களாக சம்பளம் இன்றி குடும்ப செலவிற்கு கூட பணமின்றி தவித்து வருகிறோம்.
எங்கள் மீது அரசு தனி கவனம் செலுத்தி, உரிய காலத்தில் சம்பளம் வழங்கவும், பணியை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராமங்களில் செல்ல முடியவில்லை ஒரு ஊராட்சிக்கு குறைந்தது, 6 - 25 பேர் மோட்டார் ஆப்பரேட்டர் களாக உள்ளனர். மேலும், துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி எழுத்தர் என, அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது இயலாத காரியமாக உள்ளது. ஊராட்சிகளின் நலன் கருதி, முறையான பராமரிப்பு நிதியை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஊராட்சி செயலர், திருவள்ளூர்.
விரைவில் கூடுதலாக கிடைக்கும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு தொகை வழங்குவதை அரசு குறைத்துள்ளது. அதன்படி, கிராமங்களில் வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்ட வரி இனங்களை வசூல் செய்து, அதை கிராம செலவுகளுக்கு பயன் படுத்துமாறு அறிவுறுத்துகிறோம். உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஊராட்சிக்கான நிதி விரைவில் கூடுதலாக கிடைக்கும்.
- ஊரக வளர்ச்சி துறை அதிகாரி, திருவள்ளூர்.