/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செவ்வாப்பேட்டைரோடு ரயில்வே பால பணி ஜவ்வு 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 9 ஆண்டுகளாக அவதி
/
செவ்வாப்பேட்டைரோடு ரயில்வே பால பணி ஜவ்வு 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 9 ஆண்டுகளாக அவதி
செவ்வாப்பேட்டைரோடு ரயில்வே பால பணி ஜவ்வு 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 9 ஆண்டுகளாக அவதி
செவ்வாப்பேட்டைரோடு ரயில்வே பால பணி ஜவ்வு 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் 9 ஆண்டுகளாக அவதி
ADDED : டிச 27, 2024 01:52 AM

செவ்வாப்பேட்டை:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்கத்தில் செவ்வாப்பேட்டைரோடு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கி ஒன்பது ஆண்டுகளாகியும் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை -- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் கடவுப்பாதை 15ல் உள்ளது செவ்வாப்பேட்டைரோடு ரயில் நிலையம். இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடந்து செவ்வாப்பேட்டை, திருவூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், பள்ளி, மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்த கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து, ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், 2011-ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்து அனுமதி வழங்கினர்.
இதையடுத்து, இந்த ரயில் நிலையத்தின் அருகே, ஆவடி சாலையுடன், திருவூர் பகுதியை இணைக்கும் வகையில், 2015-ம் ஆண்டு, 20 கோடி ரூபாய் மதிப்பில், 660 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலமானது கட்டும் பணி தொடங்கி நடந்து வந்தது.
இந்த பணிகள், 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டு, 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது, கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்பவர்கள் சென்று வந்தனர்.
இந்நிலையில், சில தினங்களாக பெய்த கனமழையில் சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்கு செல்லும் சாலை, குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
நடந்து செல்பவர்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரை அகற்றவும், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.