/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே கேட்டை திறப்பதில் தாமதம் மீஞ்சூரில் வாகன ஓட்டிகள் போராட்டம்
/
ரயில்வே கேட்டை திறப்பதில் தாமதம் மீஞ்சூரில் வாகன ஓட்டிகள் போராட்டம்
ரயில்வே கேட்டை திறப்பதில் தாமதம் மீஞ்சூரில் வாகன ஓட்டிகள் போராட்டம்
ரயில்வே கேட்டை திறப்பதில் தாமதம் மீஞ்சூரில் வாகன ஓட்டிகள் போராட்டம்
ADDED : ஆக 07, 2025 02:14 AM

மீஞ்சூர்:மீஞ்சூரில், ரயில்வே கேட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதால், நீண்டநேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக, மீஞ்சூர் - காட்டூர் சாலையில் உள்ள, 80க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தோர் பயணிக்கின்றனர்.
சிறிது நேரம் ரயில்வே கேட்டை மூடினாலும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை, ரயில்வே கேட் நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், பணிக்கு செல்வோர், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் பாதிக்கப்பட்டனர்.
அதிருப்தி அடைந்த வாகன ஓட்டிகள், தண்டவாள பகுதியில் நின்று, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தினர்.
அதன்பின், உடனடியாக ரயில்வே கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால், சென்னை சென்டரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், இருபுறமும் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.