/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்கு வழிச்சாலை பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
நான்கு வழிச்சாலை பணியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : அக் 24, 2024 01:04 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்டது அரக்கோணம் ------ திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை. இச்சாலை, 24 கி.மீ., துாரம் உடையது.
இச்சாலையில், திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து, அரக்கோணம் வரையிலான, 9 கி.மீ., துாரம், 20 மீட்டர் அகலத்திற்கு, முதற்கட்டமாக நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, கடந்தாண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடக்கிறது.
வியாசபுரம், வீரராகவபுரம், பால்வாய் உள்ளிட்ட கிராமங்களில் சாலை பணி நடக்கும் இடங்களில், ஜல்லிக் கற்கள் சாலையில் சிதறி கிடக்கின்றன.
அதேபோல், சாலையை அளவீடு செய்து கொம்புகள் நடப்பட்டு உள்ளது. இதை அறியாத வாகன ஓட்டிகள், இரவில் விபத்தில் சிக்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இரவில் பயணிப்போர் சாலை பணி நடப்பதை அறிந்து கொள்ளும் வகையில், ரிப்ளைக்டர் எச்சரிக்கை பலகை அமைக்கவில்லை.
மேலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மழைநீர் தங்கு தடையின்றி செல்ல, 16 இடங்களில் கல்வெட்டு பாலங்கள், இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அங்கும் உரிய முறையில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பலகை வைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் பணி நடப்பதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், ரிப்ளக்டர் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.