ADDED : ஜன 05, 2025 01:43 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே உள்ள மோவூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மோவூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில், மோவூர் கிராமம், காலனி மற்றும் மோவூர் கண்டிகை ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்கு, 1,100 பேர் வசித்து வருகின்றனர்.
கிராமவாசிகளுக்காக மோவூர் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 600க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள், மாதம்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ரேஷன் கடை கட்டி பல ஆண்டுகளான நிலையில் தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்து உள்ளது. நுழைவு வாயில், தரைத்தளம் மற்றும் கட்டடத்தின் உள்பகுதி பாழடைந்து உள்ளது. இதனால், இந்த கடைக்கு ரேஷன் வாங்கும் வருவோர், அச்சத்துடன் உள்ளனர்.
மேலும், மழை காலத்தில் மழைநீர் சுவர் வழியாக உட்புகுந்து விடுவதால், ரேஷன் பொருட்கள் நனைந்து சேதமடைந்து வருவதாக, கிராமவாசிகள் தெரிவித்தனர்.
எனவே, ஒன்றிய நிர்வாகம் சேதமடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.