/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் மண் லாரிகள் நிறுத்தம் திருப்பாச்சூரில் போக்குவரத்து பாதிப்பு
/
சாலையோரம் மண் லாரிகள் நிறுத்தம் திருப்பாச்சூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் மண் லாரிகள் நிறுத்தம் திருப்பாச்சூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் மண் லாரிகள் நிறுத்தம் திருப்பாச்சூரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 10, 2025 02:32 AM

திருவள்ளூர்:'பீக் ஹவர்' நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை காரணமாக, திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருப்பாச்சூரில் நிறுத்தப்படும், கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், சவுடு மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. நெமிலி அகரம், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சவுடு மண் எடுத்து வரும் கனரக வாகனங்கள், திருவள்ளூர் நகர் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
திருவள்ளூர் நகரில், பள்ளி மாணவ, மாணவியர் செல்லும் நேரமான காலை 8:00 - 10:00 மற்றும் மாலை 4:30 - 7:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
அந்த நேரங்களில், சவுடு மண் எடுத்து வரும் கனரக வாகனங்கள், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பாச்சூர் அருகில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
காலை நேரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வருவதால், அந்த லாரிகள் அனைத்தும், திருப்பாச்சூர் புறவழிச்சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
அதன் காரணமாக, சாலை குறுகி விடுவதால், பிற வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறாக உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட, அந்த சமயத்தில், கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார், தினமும் காலை, மாலை நேரத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.