ADDED : டிச 15, 2024 12:27 AM

திருவள்ளூர்:திருவள்ளூரில் தொடர்ந்து பெய்த கன மழையால், நகராட்சி சாலைகள் சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களுக்கு முன், தொடர்ந்து கன மழை பெய்தது. திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, ராஜாஜிபுரம், பூங்கா நகர், பெரியகுப்பம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில், மழைநீர் குளம் போல தேங்கியது. காலி மனைகளில் தேங்கிய தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.
இதனால், 17, 18வது வார்டுகளுக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், அண்ணா சாலை, சீனிவாசா நகர், பத்மாவதி நகர், ஹரே ராமா நகர், வைஷ்ணவி நகர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்தன.
என்.ஜி.ஓ., காலனி, வைஷ்ணவி நகர் பூங்காக்காக்களில் மழைநீர் குளம் போல தேங்கி உள்ளது. தேங்கிய தண்ணீரை நகராட்சி நிர்வாகத்தின் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பலத்த மழையால் மேற்கண்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் தார் பெயர்ந்து, ஜல்லி கற்கள் பரவி உள்ளன.
மேலும், குண்டும் குழியுமாக மாறிய சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி உள்ளது. இதன் காரணமாக, பகுதிவாசிகள் சாலையில் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.