/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காணும் பொங்கலையொட்டி திருத்தணியில் உற்சவர் முருகன் வீதியுலா
/
காணும் பொங்கலையொட்டி திருத்தணியில் உற்சவர் முருகன் வீதியுலா
காணும் பொங்கலையொட்டி திருத்தணியில் உற்சவர் முருகன் வீதியுலா
காணும் பொங்கலையொட்டி திருத்தணியில் உற்சவர் முருகன் வீதியுலா
ADDED : ஜன 17, 2025 01:22 AM

திருத்தணி:ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் திருத்தணியில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோவிலில் இருந்து இறங்கி வீதிகள் தோறும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி, பொங்கல் நாளில், மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் உற்சவர் முருகப்பெருமான் வலம் வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம், மேல்திருத்தணி பகுதியில் உள்ள தெருக்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று, காலை 6:00 மணிக்கு படிகள் வழியாக, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார். பின், அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணிக்கு திருத்தணி பெரியதெரு சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து சென்றனர். மாலை, 5:30 மணிக்கு, சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு 8:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றார்.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று காணும் பொங்கல் விழா மற்றும் ஒரு வாரம் தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்தது. இதனால் பொது வழியில் பக்தர்கள் மூன்று நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக, மலைக்கோவிலில், 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலைச்சுற்று விழா
திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை மலைப்பகுதியில் உள்ள சிவசக்தி சித்தேஸ்வரர் கோவிலில், நேற்று, மலைச்சுற்று விழாவையொட்டி மூலவர் ஈஸ்வரனுக்கு, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணி முதல், நள்ளிரவு 2:00 மணி வரை கோவிலில், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.
இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, மாலை 7:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை கோவில் வளாகத்தை, 108 முறை சுற்றி வந்து மூலவரை தரிசித்தனர்.
அதே போல, திருத்தணி முருகன் துணை கோவிலான சப்தகன்னியம்மன் கோவிலில் காணும்பொங்கலை முன்னிட்டு, வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிராமத்தினர் குடும்பத்துடன் வந்திருந்து மூலவர் அம்மனை வழிபட்டும், சிலர் பொங்கல் வைத்து அங்கேயே மதிய உணவுடன் கொண்டாடினர்.
அதன் அருகே உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கைலாசா பிரம்மா கோவில், அகூர் அகத்தீஸ்வரர் கோவில், லட்சுமாபுரத்தில் உள்ள சிவன், பெருமாள் கோவில், நாபளூர் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமி வீதியுலா நடந்தது.