/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொள்முதல் நிலையம் திறப்பதில் அலட்சியம் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
/
கொள்முதல் நிலையம் திறப்பதில் அலட்சியம் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
கொள்முதல் நிலையம் திறப்பதில் அலட்சியம் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
கொள்முதல் நிலையம் திறப்பதில் அலட்சியம் நெல் பயிரிட்ட விவசாயிகள் வேதனை
ADDED : ஏப் 01, 2025 12:31 AM

திருத்தணி, திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளில் விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை, சவுக்கு போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் அதிகளவில் நெல் பயிரிட்டிருந்தனர். தற்போது, நெல் அறுவடை செய்யும் பணிகள், கடந்த 15 நாட்களுக்கு மேல் தீவிரமாக நடந்து வருகிறது.
திருத்தணி ஒன்றியத்தில் விவசாயிகள் நெல் இருப்பு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் வேளாண் துறையின் சார்பில், திருத்தணி நகரத்தில் அரசு போக்குவரத்து பணிமனை பின்புறம் நெல் கொள்முதல் நிலையம், கே.ஜி.கண்டிகையில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வேலஞ்சேரியில் ஒரு நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில், திருத்தணி நகரத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வேலஞ்சேரி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால், திருத்தணி ஒன்றியம் முழுதும் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள், திருத்தணி நகரத்திற்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இதனால், 30 கி.மீ., துாரம் டிராக்டர், லாரிகள் வாயிலாக விவசாயிகள் கொண்டு வந்தாலும், வேளாண் அதிகாரிகள், நெல் கொள்முதல் செய்வதில் சுணக்கம் காட்டுகின்றனர்.
இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இருப்பு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, வேலஞ்சேரி நெல் கொள்முதல் நிலையம் திறந்து பயன்பாட்டிற்கு விடவேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

