/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அலட்சியம்: கோர்ட் உத்தரவிட்டும் பொ.ப.துறை மெத்தனம்
/
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அலட்சியம்: கோர்ட் உத்தரவிட்டும் பொ.ப.துறை மெத்தனம்
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அலட்சியம்: கோர்ட் உத்தரவிட்டும் பொ.ப.துறை மெத்தனம்
காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அலட்சியம்: கோர்ட் உத்தரவிட்டும் பொ.ப.துறை மெத்தனம்
ADDED : ஆக 19, 2024 11:24 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டதன் அடிப்படையில், காக்களூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆறு ஆண்டுகளுக்கு முன் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 576 ஏரிகள், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 654 ஏரிகள் உள்ளன. மாவட்டம் முழுதும், 3,227 குளம், குட்டைகள் உள்ளன.
மாவட்டத்தில் பெரும்பாலான ஏரி, குளங்களை பலர் விவசாயம் செய்தும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, நீர்நிலைகளுக்கு வரும், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, துார்ந்து போனது போன்ற காரணங்களால், மழை காலத்தில் கிடைக்கும் மழை நீர் நீர்நிலைக்கு வராமல், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி, பலத்த சேதத்தை விளைவிக்கிறது.
இதையடுத்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, ஐகோர்ட் பல முறை, அரசுக்கு வலியுறுத்தி வருகிறது.
சுருங்கிய காக்களூர் ஏரி
திருவள்ளூர் வட்டம், காக்களூர் ஏரி, 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி எல்லையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் தேங்கும் தண்ணீரைக் கொண்டு, காக்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டு வந்தது.
நகர் விரிவாக்கம் காரணமாக விளை நிலங்கள், விலை நிலங்களாக மாற்றப்பட்டு, வீடுகள், கட்டடங்கள் உருவாகி விட்டன. இதற்கு, காக்களூர் ஏரியும் தப்பவில்லை.
இந்த ஏரியில் ஒரு பகுதியை, வீட்டு வசதி வாரியம் வாரியாக வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்யப்பட்டது. மீதம் உள்ள, 100 ஏக்கர் அளவில் தான் ஏரி உள்ளது.
இந்த ஏரியைச் சுற்றி உள்ள, ஜே.என்.சாலை, திரு.வி.க., பேருந்து நிலையம், காக்களூர் ஏரிக்கரை சாலை ஆகிய இடங்களுக்கு அருகில், பலரும் வீடு, கடை என, 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால், ஏரி மிகவும் சுருங்கி, குளமாக மாறி வருகிறது.
எச்சரிக்கை நோட்டீஸ்
இந்நிலையில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவின்படி, கடந்த, ஆக., 2018ம் ஆண்டு, திருவள்ளூர் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர், காக்களூர் ஏரி ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், அப்போது, 201 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, காக்களூர் ஏரியில் ஆக்கிரமித்துள்ளவர்களை, 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்; வீடுகளை இழந்தோருக்கு, பட்டரைபெரும்புதுாரில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
அதன்பின், இந்த நடவடிக்கை பல்வேறு அரசியல்வாதிகளின் குறுக்கீடு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை மாவட்ட நிர்வாகம், காக்களூர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராமல் அலட்சியமாக உள்ளது.
இதன் காரணமாக, கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையால், திருவள்ளூர் நகர் வெள்ளத்தில் பாதித்தது. இதற்கு காரணம், காக்களூருக்கு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பும், ஏரியைச் சுற்றிலும் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களே காரணம்.
ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, ஏரியை துார் வாரியிருந்தால், மழைநீரை சேகரித்திருக்க முடியும். இதன் வாயிலாக, திருவள்ளூர் நகரைச் சுற்றிலும், 5 கி.மீட்டர் துாரம் வரை, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாமல் பாதுகாத்திருக்க முடியும்.
ஐகோர்ட் உத்தரவு இருந்தும், பொதுப்பணி, வருவாய் துறையினரின் அலட்சியத்தால், ஒவ்வொரு மழை காலத்திலும், திருவள்ளூர் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார் வார வேண்டும்.