/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அலட்சியம்! கும்மிடியில் மூன்று ஊராட்சிகளில் கழிவுகளை கையாள்வதில்... சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டுகொள்ளாத பி.டி.ஓ., அலுவலகம்
/
அலட்சியம்! கும்மிடியில் மூன்று ஊராட்சிகளில் கழிவுகளை கையாள்வதில்... சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டுகொள்ளாத பி.டி.ஓ., அலுவலகம்
அலட்சியம்! கும்மிடியில் மூன்று ஊராட்சிகளில் கழிவுகளை கையாள்வதில்... சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டுகொள்ளாத பி.டி.ஓ., அலுவலகம்
அலட்சியம்! கும்மிடியில் மூன்று ஊராட்சிகளில் கழிவுகளை கையாள்வதில்... சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டுகொள்ளாத பி.டி.ஓ., அலுவலகம்
ADDED : டிச 31, 2024 01:23 AM

கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி நகரை சுற்றி குடியிருப்பு பகுதிகள் பெருகி வரும் மூன்று ஊராட்சிகளில், கழிவுகளை கையாள்வதில், வட்டார வளர்ச்சி அலுவலகம் அலட்சியமாக செயல்படுவதால், சுகாதாரம், நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், தொழிற்சாலை நகரமான கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியை ஒட்டியுள்ள தேர்வழி, பெத்திக்குப்பம், புதுகும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று ஊராட்சிகளில், நேதாஜி நகர், பிரித்வி நகர், முனுசாமி நகர், பெரியார் நகர், பூபால் நகர், சபரி கார்டன், பாலகிருஷ்ணாபுரம், பாலயோகி நகர், எல்.வி., நகர் உட்பட, 40க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
குப்பை கழிவு
தொழில் வளர்ச்சியின் காரணமாக அந்த மூன்று ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதன் சுகாதார உள்கட்டமைப்பு, ஈடு செய்ய முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். கடுமையான சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும், அந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் இருந்து, தினசரி, 8 -- 10 டன் வரை குப்பை கழிவு சேகரமாகிறது.
திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில், துாய்மை பணியாளர்கள், குப்பையை சேகரித்து ஒதுக்குபுறமான இடங்களில் குவித்து எரித்து வருகின்றனர்.
முறையாக சேகரிக்க தவறும் பகுதிகளில் இருந்து குப்பையை மூட்டையாக கட்டும் குடியிருப்புவாசிகள், சாலையோரம் வீசி செல்கின்றனர்.
ஏரிக்கரைகள், சாலை யோரம் என கேட்பாரற்ற இடங்களில் கழிவு குவித்து எரிக்கப்படுவதால் அப்பகுதிகளில் நீர், நிலம் மற்றும் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் பாதிப்பு
குறிப்பாக, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஈசா பெரிய ஏரி, பாலகிருஷ்ணாபுரம் ஏரி, பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரை ஏரி, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ ஏரி, அகழி ஏரி ஆகிய நீர் ஆதார ஏரிகள் தற்போது கழிவுநீர், கழிவு சூழ்ந்து அழிவின் விளிம்பில் உள்ளன.
இதனால் மூன்று ஊராட்சிகளின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் குவிக்கப்படும் இடங்களில், அளவுக்கு அதிகமாக குப்பை சேரும் போது, துாய்மை பணியாளர்கள் அதை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் மக்கள் சுவாசிக்கும் காற்றில் மாசு கலந்து சுவாச பிரச்னையால் தவித்து வருகின்றனர்.
நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு கலப்பால், குடியிருப்புவாசிகளின் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மூன்று ஊராட்சிகளிலும் முறையாக கழிவை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பல ஆண்டு காலமாக குடியிருப்புவாசிகள் கோரிக்கை மனுக்களை அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் மக்கள் உள்ளனர்.
மூன்று ஊராட்சிகளின் நீர்நிலைகள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை காக்க, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவான இடம் ஒன்றை தேர்வு செய்து அதில், கழிவை தரம் பிரித்து, முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர் ஒருவர் கூறுகையில், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். விரைவில், பொதுவான இடத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு ஏற்படுத்தி முறையாக செயல்படுத்தப்படும்' என தெரிவித்தார்.