/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் புதிய தடுப்பணை திட்டங்கள்...ஜவ்வு!: 9 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்: வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படுமா?
/
ஆரணி ஆற்றில் புதிய தடுப்பணை திட்டங்கள்...ஜவ்வு!: 9 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்: வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படுமா?
ஆரணி ஆற்றில் புதிய தடுப்பணை திட்டங்கள்...ஜவ்வு!: 9 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்: வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படுமா?
ஆரணி ஆற்றில் புதிய தடுப்பணை திட்டங்கள்...ஜவ்வு!: 9 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்: வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படுமா?
ADDED : பிப் 13, 2024 09:09 PM

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாராயணவனம் பகுதியில் உள்ள சதாசிவகொண்டா மலைப்பகுதியில் உருவாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூரில் தொடங்கி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி, தத்மஞ்சி, பிரளயம்பாக்கம் வழியாக, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு வங்காள விரிகுடா கடலில் முடிவடைகிறது. தமிழக பகுதியில், 65 கி.மீ., பயணிக்கிறது.
ஆற்றில் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு அணைக்கட்டுகளும், சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், ரெட்டிப்பாளையம், ஆண்டார்மடம் ஆகிய இடங்களில், ஏழு தடுப்பணைகளும் உள்ளன.
மழைக்காலங்களில் அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு பெரிதும் துணையாக இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழையால் ஆரணி ஆற்றில் அணைக்கட்டு மற்றும் தடுப்பணை உள்ள பகுதிகளில், ஒரு டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது. ஒவ்வொரு தடுப்பணை மற்றும் அணைக்கட்டில் இருந்தும், 2 கி.மீ., தொலைவிற்கு ஆற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் நல்ல நிலை உள்ளது.
கடந்த ஆண்டு மழையின்போது, அணைக்கட்டில் இருந்து, 9 டி.எம்.சி., உபரிநீர் வெளியேறி பழவேற்காடு கடலில் கலந்தது.
ஒவ்வொரு ஆண்டு மழையின்போது, ஆரணி ஆற்றின் வழியாக, 7 முதல் 9 டி.எம்.சி., மழைநீர் பழவேற்காடு கடலில் சென்று கலக்கிறது. ஆரணி ஆற்றில் கூடுதலாக மழைநீரை சேமித்து வைத்து, அதன் வாயிலாக நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக, பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு, ஊத்துக்கோட்டை அருகே மாம்பாக்கம் ஆகிய இடங்களில் புதிதாக இரண்டு தடுப்பணைகள் அமைக்க கடந்த, 2021ல் திட்டம் தயாரிக்கப்பட்டது.
ஒவ்வொரு தடுப்பணையும், 14 கோடி ரூபாயில் அமைக்க திட்டம் தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை தடுப்பணைகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:
ஆரணி ஆற்றில் உள்ள அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகளில் தேக்க தண்ணீர் குறைவாகவும், கடலில் கலந்தும் வீணாகும் தண்ணீர், அதிகமாகவும் உள்ளது. கடலில் கலக்கும் மொத்த தண்ணீரையும் சேமிக்க வாய்ப்பில்லை. அதே சமயம், புதிய தடுப்பணைகள் அமைவதன் வாயிலாக கூடுதலாக தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். குறைந்தபட்சம் 2 கி.மீ., தொலைவிற்கு ஒரு தடுப்பணை என திட்டமிட வேண்டும்.
தடுப்பணைகள் அமையும் இடங்களின் அருகாமையில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, கால்வாய்கள் வாயிலாக தண்ணீரை கொண்டு சென்று சேமிக்கலாம். கடந்த, மூன்று ஆண்டுகளாக தமிழக அரசின் பட்ஜெட்டில் தடுப்பணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட்டின் போது, புதிய தடுப்பணை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
புதிய தடுப்பணைகள் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நிதி ஆதாரம் பெற்று தடுப்பணைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.

