/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு ரூ.1.45 கோடியில் புதிய கட்டடம் மூன்று இடங்களில் தற்காலிக நிறுத்தம்
/
பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு ரூ.1.45 கோடியில் புதிய கட்டடம் மூன்று இடங்களில் தற்காலிக நிறுத்தம்
பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு ரூ.1.45 கோடியில் புதிய கட்டடம் மூன்று இடங்களில் தற்காலிக நிறுத்தம்
பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு ரூ.1.45 கோடியில் புதிய கட்டடம் மூன்று இடங்களில் தற்காலிக நிறுத்தம்
ADDED : நவ 06, 2025 03:12 AM

பொன்னேரி: பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு, 1.45 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்காக, தற்காலிகமாக மூன்று இடங்களில் நிறுத்தம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாதவரம், திருவள்ளூர், திருத்தணி, பழவேற்காடு, திருப்பதி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலைய கட்டடம் 1999ல் கட்டப்பட்டது. தற்போது, ஆங்காங்கே சேதமடைந்து பலவீனமாகி உள்ளது. இதையடுத்து, கட்டடத்தை இடித்துவிட்டு, 1.45 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டுவதற்கு, பொன்னேரி நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.
அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், நகராட்சி தலைவர் பரிமளம், நகராட்சி கமிஷனர் தனலட்சுமி, நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எட்டு கடைகள், நேர காப்பாளர் அறை, பயணியர் காத்திருப்பு வளாகம் என, 3,300 சதுரஅடி பரப்பில் கட்டடம் அமையவுள்ளது.
மேலும், வளாகம் முழுதும் 'சிசிடிவி' பொருத்தவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணியர் இருக்கை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.
ஆறு மாதத்திற்குள் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகள் முடியும் வரை, மூன்று இடங்களில் தற்காலிக நிறுத்தம் அமைத்து, பேருந்துகளை இயக்குவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, பழவேற்காடு, மெதுார், பெரும்பேடு, கோளூர், கள்ளூர், அண்ணாமலைச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பொன்னேரி தேரடி பகுதியில் இருந்தும்.
மீஞ்சூர், தத்தமஞ்சி, காட்டூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
மேலும், பெரியபாளையம், திருத்தணி, செங்குன்றம், மாதவரம், திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், பொன்னேரி பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
மூன்று இடங்களில் இருந்து, பேருந்துகளை இயக்கும்போது பயணியர் சிரமமின்றி சென்று வருவதற்கு ஏதுவாக போதிய வசதிகளையும், உரிய வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

