/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மலைக்கோவில் நெரிசலை தடுக்க... புதிய முயற்சி ! விடுமுறை, விழா நாட்களில் கார், வேன் செல்ல தடை
/
திருத்தணி மலைக்கோவில் நெரிசலை தடுக்க... புதிய முயற்சி ! விடுமுறை, விழா நாட்களில் கார், வேன் செல்ல தடை
திருத்தணி மலைக்கோவில் நெரிசலை தடுக்க... புதிய முயற்சி ! விடுமுறை, விழா நாட்களில் கார், வேன் செல்ல தடை
திருத்தணி மலைக்கோவில் நெரிசலை தடுக்க... புதிய முயற்சி ! விடுமுறை, விழா நாட்களில் கார், வேன் செல்ல தடை
ADDED : டிச 26, 2024 03:29 AM

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதை மட்டுமே உள்ளதால், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, விடுமுறை, முக்கிய விழா நாட்களில், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு கோவில் நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலைப்பாதையில் தொடரும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவர் முருகபெருமானை தரிசித்து செல்கின்றனர்.
பெரும்பாலான வெளியூர் பக்தர்கள் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்களில் முருகன் மலைக்கோவிலுக்கு வருகின்றனர்.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் வாகனங்கள் செல்வதற்காக திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, மலைக்கோவிலுக்கு, ஒன்றரை கி.மீ., துாரம் ஒரு மலைப்பாதை அமைத்து, சுங்க கட்டணம் வசூலித்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக் கிருத்திகை மற்றும் டிச.,31ம் தேதி நடைபெறும் படித்திருவிழா ஆகிய நாட்களில் மட்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவதால், மலைப்பாதையில், எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி கிடையாது.
பக்தர்கள் மட்டும் மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தன.
பக்தர்கள் சிரமம்
ஆனால், இரு ஆண்டுகளாக, முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர்.
குறிப்பாக அரசு விடுமுறை, வார விடுமுறையான சனி, ஞாயிறு, மாதந்தோறும் வரும் கிருத்திகை மற்றும் முக்கிய விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் கார், வேன், பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களில் வருவதால், மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழியில்லாமல், கடும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், முருகன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், சமீபத்தில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
அந்த வாகனங்கள், மலைப்பாதை அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் பின்புறத்தில் உள்ள காலியான இடத்தில் அனுமதிக்கலாம் என, தீர்மானித்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி கூறியதாவது:
சில மாதங்களாக அரசு விடுமுறை, வார விடுமுறை மற்றும் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவிலில், 500 - 750 வாகனங்கள் நிறுத்துவதற்கு தான் இடவசதி உள்ளது.
தனியார் பேருந்துகள்
ஆனால், ஆயிரக்கணக்கில் வரும் வாகன ஓட்டிகள், சிலர் இடவசதியில்லாததால், மலைப்பாதையின் ஓரம், கார், வேன், பேருந்து ஆகியவற்றை நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு செல்கின்றனர்.
இதனால், மலைப்பாதையில் வாகனங்கள் சென்றுவர முடியாமல், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதனால் பக்தர்கள் நலன் கருதி மேற்கண்ட நாட்களில், அனைத்து வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள் நீதிமன்றம் பின்புறத்தில் நிறுத்துவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல, மாற்றுத்திறனாளிகள், வயதான பக்தர்கள் நலன்கருதி கோவில் நிர்வாகம் சார்பில், இரண்டு கோவில் பேருந்துகள், இரு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.