/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
/
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
ADDED : மே 22, 2025 02:27 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், நடப்பாண்டில் இருந்து புதிய வரி நிர்ணயம் செய்து வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் ஊராட்சிகளில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள், ஒரு மாதத்தில் முடித்து, புதிய வரி வசூலிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2023ம் ஆண்டுக்கு முன் வரை வீடுகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை, அந்தந்த ஊராட்சி தலைவர் மற்றும் செயலர்கள் தோராயமாக நிர்ணயம் செய்து வசூலித்து வந்தனர்.
வரி வசூலிப்பு
இந்த நடைமுறையில் பெரும்பாலான ஊராட்சிகளில் வீடுகளுக்கு வரி வசூலிக்காமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வந்தன. கடந்தாண்டு முதல் அனைத்து ஊராட்சிகளின் வருவாயை உயர்த்தவும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு தேவையான நிதியுதவி பெறுவதற்கும், அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் வரி நிர்ணயம் செய்து, 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்து, ஊராட்சி செயலர்கள் வரி வசூலித்து வந்தனர்.
இதில், ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் 44 ரூபாயும், அதிகபட்சமாக 120 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒருமுறை வரி வசூலிக்கப்பட்டது. இந்த வரியை ஊராட்சி செயலர்கள் தோரயமாக நிர்ணயம் செய்து, வசூலித்து வந்தனர்.
தமிழக அரசு அனைத்து ஊராட்சிகளின் வருவாயை உயர்த்தவும், அடிப்படை வசதிகள் தேவைக்காக நிதியுதவி பெறுவதற்கும், நடப்பாண்டில் இருந்து ஊராட்சிகளில் உள்ள வீடுகளை தரம் பிரித்து, சதுரடி கணக்கில் சொத்துவரி நிர்ணயம் செய்து வசூலிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அனைத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது.
கணக்கெடுப்பு
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் புதிய வரி நிர்ணயம் செய்வதற்கு ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், நேற்று முன்தினம் முதல் ஊராட்சிகளில் உள்ள வீடுகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
இதற்காக, காணொலி வாயிலாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர், மக்கள் நலப் பணியாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் குடிசை வீடு, ஓட்டு வீடு மற்றும் தளம்போட்ட வீடுகள் எண்ணிக்கை மற்றும் எவ்வளவு சதுரடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஊராட்சி செயலர், மக்கள் நலப் பணியாளர் மற்றும் பணி தள பொறுப்பாளர்கள் வாயிலாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தரவு
மேலும், அந்தந்த ஊராட்சி நிர்வாகம், குடிசை வீடு, ஓட்டு வீடு, தளம் வீடு என, தரம்பிரித்து, 1 சதுரடிக்கு குறிப்பட்ட தொகையை நிர்ணயம் செய்து, ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, ஒன்றிய அதிகாரிகள் வாயிலாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம்.
ஒரு மாதத்திற்குள் இப்பணிகளை முடித்து, நடப்பாண்டிற்கான புதிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுஉள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.