/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரும்பு குழாய், தகர ஷீட்டுன்னு எப்படி போட்டாலும்... கணக்கு சரியா வரலையே!: ரூ.10 லட்சம் மதிப்பு நிழற்குடையால் பயணியர் அதிர்ச்சி
/
இரும்பு குழாய், தகர ஷீட்டுன்னு எப்படி போட்டாலும்... கணக்கு சரியா வரலையே!: ரூ.10 லட்சம் மதிப்பு நிழற்குடையால் பயணியர் அதிர்ச்சி
இரும்பு குழாய், தகர ஷீட்டுன்னு எப்படி போட்டாலும்... கணக்கு சரியா வரலையே!: ரூ.10 லட்சம் மதிப்பு நிழற்குடையால் பயணியர் அதிர்ச்சி
இரும்பு குழாய், தகர ஷீட்டுன்னு எப்படி போட்டாலும்... கணக்கு சரியா வரலையே!: ரூ.10 லட்சம் மதிப்பு நிழற்குடையால் பயணியர் அதிர்ச்சி
UPDATED : நவ 14, 2025 02:41 AM
ADDED : நவ 13, 2025 10:17 PM

ஆவடி: திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலையில் உள்ள கணபதி நகரில், இரும்பு குழாய், தகர ஷீட் போட்டு, 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை, திருவள்ளூரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் என, பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலையில் கணபதி நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதை, சுற்றுவட்டாரத்தில் ஸ்ரீநகர் காலனி, சோழபுரம், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கணபதி நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட நவீன பேருந்து நிழற்குடையை, நேற்று முன்தினம் அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
இதில், அரசு விளம்பரம் மட்டும் தான் நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி நவீனம் என்ற வார்த்தை மற்றும் 12 இருக்கைகள் மட்டும் தான் உள்ளது. வேறு எந்த நவீன வசதியும் செய்யவில்லை.
இந்த பேருந்து நிழற்குடை அமைந்துள்ள இடம் 300 முதல் 400 சதுர அடிக்கும் குறைவாக இருக்கும் நிலையில், இதற்கு எப்படி 10 லட்சம் ரூபாய் செலவாகும் என, கேள்வி எழுந்துள்ளது.
தற்போது, இந்த நவீன நிழற்குடை சமூக ஆர்வலர்கள், கட்டுமான துறையில் இருப்பவர்கள் இடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த பணத்தில் 500 சதுர அடியில் தளம் போட்ட வீடு கட்டலாம் என்றும், வெறும் இரும்பு குழாய், தகர ஷீட் போடப்பட்ட நிழற்குடைக்கு 10 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காட்டுவது, ஏமாற்று வேலை என குற்றஞ்சாட்டி உள்ளனர்.
'கமிஷன்' போனால் கூட 5 லட்சம் ரூபாய்க்குள் இந்த நிழற்குடை கட்டி விடலாம் என கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, இந்த நிழற்குடை திறப்பு நிகழ்ச்சி குறித்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள், பத்திரிகை செய்தி குறிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய 'பேருந்து நிலையம்' திறப்பு என, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. 10 லட்சத்தில் எப்படி பேருந்து நிலையம் கட்ட முடியும், மாவட்ட நிர்வாகம் இப்படி ஒரு தவறான தகவலை வெளியிடலாமா என கேள்வி எழுந்துள்ளது.
தவிர, 'உலகத்திலேயே 10 லட்சத்துல பேருந்து நிலையம் கட்டிய ஒரே நிர்வாகம், நம்ம திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தான்' என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

