/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதியவர் கொலை வழக்கு இருவருக்கு ஆயுள் தண்டனை
/
முதியவர் கொலை வழக்கு இருவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : நவ 13, 2025 10:18 PM
பொன்னேரி: சென்னை புழலில், வீட்டின் முன் கார் 'பார்க்கிங்' செய்ததை தட்டிக்கேட்ட முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை புழல், சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் பரதராமன், 61. தனியார் கடையில் மருந்தாளுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2022 பிப்., 1ம் தேதி, பரதராமன் வீட்டின் முன், அதே தெருவைச் சேர்ந்த குமரவேல், 43, என்பவருடைய கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தன் வீட்டருகே கார் நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தி வருவது குறித்து பரதராமன், குமரவேலிடம் தட்டிக்கேட்டபோது தகராறு ஏற்பட்டது.
குமரவேல் மற்றும் அவரது உறவினர்கள் பரதராமனை தாக்கினர். இதில், பரதராமன் பலத்த காயமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிப்., 4ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, புழல் காவல் நிலைய போலீசார், குமரவேல், மனைவி கல்பனா, உறவினர்கள் அருணகிரி, பழனி, மலர், சங்கீதா ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லாசர் வாதாடினார்.
வழக்கு விசாரணை முடிவில், நேற்று நீதிபதி சிவகுமார், குமரவேல், 43, மற்றும் அவரது உறவினர் அருணகிரி, 64, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.

