/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வைக்கோல் விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் கலக்கம்
/
வைக்கோல் விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் கலக்கம்
ADDED : ஏப் 01, 2025 12:41 AM

திருத்தணி,
திருத்தணி தாலுகாவில், 83 வருவாய் கிராமங்களில், அதிகளவிலான மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். தற்போது, கோடை காலம் என்பதால், கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், வயல்வெளிகள் புல் இல்லாமல் காய்ந்துள்ளதால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதில்லை. எனவே, கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனமாக அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருவதால், கால்நடை வளர்ப்போர், வைக்கோல் வாங்கி சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில், வைக்கோல் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 1 கிலோ வைக்கோல், 6 - 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோல் வைக்கோலில், 25 - 40 கிலோ வரை இருக்கும். இதன் விலை குறைந்தபட்சம், 150 - 225 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையிலும் வைக்கோல் கிடைப்பது அரிதாக உள்ளதால், இந்த கோடைக்காலத்தில் கால்நடைகளை எப்படி காப்பாற்றுவது என கலக்கத்தில் உள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் நலன் கருதி, கடந்த 2016ம் ஆண்டு போல் வைக்கோலை மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.