தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்ற ஆர்வமில்லை:ரூ.50 - ரூ.150 மட்டுமே கிடைப்பதாக குற்றச்சாட்டு மீண்டும் விவசாய பணிகளுக்கு திரும்பும் மக்கள்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்ற ஆர்வமில்லை:ரூ.50 - ரூ.150 மட்டுமே கிடைப்பதாக குற்றச்சாட்டு மீண்டும் விவசாய பணிகளுக்கு திரும்பும் மக்கள்
UPDATED : செப் 28, 2026 11:29 PM
ADDED : செப் 28, 2026 10:54 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், 'விபி - ஜி ராம்ஜி' எனும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு வேலை மற்றும் சம்பளத்தில் கறார் காண்பிப்பதால், பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பலருக்கும், தினக்கூலியாக 50 முதல் 150 ரூபாய் மட்டுமே கிடைப்பதால், திட்டத்தில் பணியாற்ற ஆர்வம் காண்பிப்பதில்லை. மாறாக, பெரும்பாலானோர் மீண்டும் விவசாய பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, பூண்டி, எல்லாபுரம் உட்பட, 14 ஒன்றியங்களில், 526 கிராம ஊராட்சிகள் உள்ளன.
இங்கு, ஒவ்வொரு ஊராட்சியிலும், 'விபி - ஜி ராம்ஜி' திட்டத்தில், சராசரியாக 300 பேர் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 88 பேர் பணியில் உள்ளனர்.
விபி - ஜி ராம்ஜி திட்டத்தில், பணியாளருக்கு, ஆண்டுக்கு 125 நாட்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, தினக்கூலியாக குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சமாக 345 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் நீர்வளப் பாதுகாப்பு, அடிப்படை ஊரகக் கட்டமைப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் பருவநிலை மாற்றத் தடுப்புப் பணிகளுக்கு முன்னுரிமை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு, இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின்படி, தற்போது மாவட்டம் முழுதும், கிராமங்களில் நீர் மேலாண்மை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக குளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு, விபி - ஜி ராம்ஜி திட்ட பணியாளர்களுக்கு, கூலியில் கறார் காண்பிப்பதாக தொழிலாளர்கள் புலம்புகின்றனர். மேலும், ஒரு நாள் முழுதும் பணியாற்றினால் கூட, 50 முதல் 150 ரூபாய் மட்டுமே கூலி கிடைப்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால், தொழிலாளர்கள் பலரும், 125 நாள் பணிக்கு செல்லாமல், உள்ளூரில் விவசாய பணிகளுக்கு செல்வதாக கூறுகின்றனர்.
இதனால், விபி - ஜி ராம்ஜி திட்டத்தில், தினமும் பணிக்கு வர வேண்டிய பலரும் வருவதில்லை. மாறாக, மாற்று வேலைக்கு சென்றுவிடுவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பணித்தள பொறுப்பாளர் ஒருவர் கூறியதாவது:
'விபி - ஜி ராம்ஜி' திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளர்களாக, திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 2,000த்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு, 2025 - 26ம் நிதியாண்டில் பணியாற்றியவர்களுக்கு, இதுவரை ஓராண்டாக சம்பளம் வராததால், பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம்.
எனவே, பணித்தள பொறுப்பாளர்களுக்கு விரைவாக சம்பளம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூலி சரியாக கிடைப்பதில்லை ஒரு வாரம் குளம் வெட்டும் பணிக்கு சென்றேன். தினக்கூலியாக, தினசரி வெறும் 50 ரூபாய் மட்டுமே கணக்கிடப்பட்டு, 300 ரூபாய் மட்டுமே கிடைத்தது. 100 நாள் வேலையாக இருந்த போது, தினமும் 250 முதல் 290 ரூபாய் கிடைத்தது. குடும்பம் நடத்த வசதியாக இருந்தது. தற்போது, வேலை நாட்கள், கூலி ஆகியவை உயர்த்தப்பட்ட நிலையில், கூலி சரியாக கிடைப்பதில்லை. அதனால், 125 நாள் வேலைக்கு செல்லாமல், களை பறிப்பு, நாற்று நடவு என, விவசாய பணிக்கு திரும்பியுள்ளேன். என்னை போல், எங்கள் கிராமம் மட்டுமின்றி, அருகே உள்ள கிராமங்களிலும், பலரும் விவசாய பணிகளுக்கு திரும்பியுள்ளனர். - மரகதம், 55, திருவாலங்காடு.
