திருவள்ளூர் மாவட்டத்தில் 975 ஏரிகளில் நீர் இருப்பு ஒண்ணுமில்ல!ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் 975 ஏரிகளில் நீர் இருப்பு ஒண்ணுமில்ல!ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 21, 2026 11:13 PM
ADDED : ஜூலை 21, 2026 08:05 PM

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,167 ஏரிககளில், 975க்கும் மேற்பட்ட ஏரிகள், தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. அதனால், ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 586 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும் என, மொத்தம் 1,167 ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகளை நம்பி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதில், ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், புதர் சூழ்ந்து வீணாகி வருகின்றன.
மேலும், பல ஏரிகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், ஏரியில் நீர் சேகரமாவதில் ஏற்பட்ட சிக்கலில், ஏரிகள் நீரின்றி வறண்டு இருக்கின்றன.
மேலும், ஏரிகளில் துார் வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக சவுடு மண் அள்ளப்பட்டதால், பல ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏரிகள், பள்ளத்தாக்காக மாறியுள்ளதோடு புதர் சூழ்ந்து கிடப்பாதல் தற்போது ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால், இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், பல ஏரிகள் முறையான பராமரிப்பில் இல்லாததால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, குடியிருப்புகளாகவும், விளை நிலங்களாகவும், சில ஏரிகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன.
மொத்தத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வள துறை கட்டுப்பாட்டில் உள்ள 586 ஏரிகளில், 450 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.
இதற்கு, வரத்து கால்வாய்களை முறையாக சீரமைக்காததே காரணம் எனவும், ஏரிகளை பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், வரும் காலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் தலையீட்டால் எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை என, அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதே போல், ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 581 ஏரிகளில், 500க்கும் மேற்பட்ட ஏரிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதில், ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள் புதர் சூழ்ந்து கிடப்பதால், ஏரிகளுக்கு நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் சேகரமாகும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைத்து முறையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
