/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பு சந்தையாக மாறியதால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜன 03, 2024 09:56 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே, எஸ்.பி., அலுவலகம், விருந்தினர் மாளிகை, மற்றும் அனைத்து மாவட்ட அளவிலான அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், நெடுஞ்சாலையை ஒட்டி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இந்த சுற்றுச்சுவர் அருகில், எஸ்.பி., குடியிருப்பில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் இடதுபுறம் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.
காய்கறிகள், பழக்கடைகள், தள்ளுவண்டி ஹோட்டல், இரும்பு, துணிக்கடைகள் என, பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றை வாங்க வருவோர், தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்துகின்றனர். இதன் காரணமாக, திருவள்ளூர் - திருத்தணி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுதும் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றும் மாவட்ட நிர்வாகம், கலெக்டர் அலுவலகம் அருகிலேயே அமைக்கப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை கண்டும், காணாமல் உள்ளது, சமூக ஆர்வலர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
எனவே, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.