ADDED : ஜூன் 11, 2025 02:58 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான, 48 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பாதுகாக்கும், தாமரை ஏரி, முறையான பராமரிப்பின்றி தற்போது, அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரின் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியின் கழிவுநீர், ஏரியின் வரத்து கால்வாயில் திறந்து விடப்படும் தொழிற்சாலை மற்றும் டேங்கர் லாரியின் கழிவுநீர் கலந்து ஏரி முற்றிலும் மாசு அடைந்து, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
தாமரை ஏரியை காக்க அரசு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக ஆகாய தாமரைகளை நீர் வளத்துறையினர் அகற்றி, கழிவுநீர் கலப்பை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.