/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை சிப்காட்டில் அடிப்படை வசதிஇல்லாத தொழிற்சாலைகள்கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்
/
திருமழிசை சிப்காட்டில் அடிப்படை வசதிஇல்லாத தொழிற்சாலைகள்கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்
திருமழிசை சிப்காட்டில் அடிப்படை வசதிஇல்லாத தொழிற்சாலைகள்கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்
திருமழிசை சிப்காட்டில் அடிப்படை வசதிஇல்லாத தொழிற்சாலைகள்கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்
ADDED : அக் 21, 2024 02:12 AM

திருவள்ளூர்:திருமழிசை தொழிற்பேட்டையில் திருவள்ளூர் கலெக்டர் கடந்த ஜூலை மாதம் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழிற்பேட்டையில் சுமார் 300 மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கடந்தாண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் போது 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க நீர் வெளியேற்று கால்வாய்களை துார்வார வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 18 ம் தேதி திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் திருமழிசை தொழிற்பேட்டையில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆய்வு செய்து மழைநீர் தேஙகாதவாறு கால்வாய்கள் துார்வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் தொழிற்பேட்டையில் எவ்வித சீரமைப்பு பணிகள் நடவடிக்கைகளும், மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் தொழிற்பேட்டையில் சேதமடைந்துள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது.
இதனால் தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொழிற்சாலை பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாயில் மின்கம்பங்கள் இருப்பதால் மின்வாரிய ஊழியர்களும் மின்சாரம் தொடர்பாக பிரச்சனைகளை சீரமைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கலெக்டர் உத்தரவிட்டும் கால்வாய்கள் துார்வார அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் சாலை உள்வாங்கியுள்ளது.
மேலும் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் விபத்து ஏதும் ஏற்பட்டால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மழைக்காலம் துவங்கிய நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

