/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமனத்தில்...முறைகேடு ஆளுங்கட்சியினருடன் அதிகாரிகள் கைகோர்ப்பு
/
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமனத்தில்...முறைகேடு ஆளுங்கட்சியினருடன் அதிகாரிகள் கைகோர்ப்பு
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமனத்தில்...முறைகேடு ஆளுங்கட்சியினருடன் அதிகாரிகள் கைகோர்ப்பு
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமனத்தில்...முறைகேடு ஆளுங்கட்சியினருடன் அதிகாரிகள் கைகோர்ப்பு
ADDED : அக் 09, 2025 02:55 AM

திருவள்ளூர் : கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமனம் செய்வதில், பல்வேறு முறைகேடு நடந்து வருகிறது. ஏற்கனவே, பல ஆண்டுகளாக பணிபுரிந்தோரை பணி நீக்கம் செய்து, ஆளுங்கட்சியினர் பரிந்துரை செய்வோருக்கு முன்னுரிமை கொடுத்தும், போலி கணக்கு காண்பித்து, பணம் கையாடல் செய்வதாகவும், பாதிக்கப்பட்டோர் குற்றஞ்சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாவட்ட சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக, தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவற்றை தவிர, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில், கொசுப்புழு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், வீடுகளில் உள்ள உபயோகம் இல்லாத பொருட்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது.
வீடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையற்ற பொருட்களை அகற்றவும், மழைநீர் தேங்கும் இடமிருந்தால், அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், தற்காலிக மஸ்துார் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், வீடுகளுக்கு நேரில் சென்று, கொசுப்புழு ஒழிப்பதற்கான, 'அபேட் சொல்யூஷன்' பிளீச்சிங் பவுடர் தெளித்தல் மற்றும் அதிகளவில் கொசு இருந்தால், புகை தெளித்தல் போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சியை பொறுத்தவரை, சுகாதார அலுவலர்களே அவர்களின் பணியை கண்காணிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளிலும், மாவட்ட சுகாதார துறை வாயிலாக, அந்தந்த ஒன்றிய சுகாதார அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை, அந்தந்த பருவத்திற்கு ஏற்ப, தற்காலிக மஸ்துார் பணியாளர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
அந்த வகையில், நடப்பு அக்., - டிச., வரை, மூன்று மாத காலத்திற்கு, மாவட்டம் முழுதும் உள்ள 13 ஒன்றியத்திற்கும், தலா 40, புழல் ஒன்றியத்திற்கு 20 என, 540 தற்காலிக மஸ்துார் பணியாளரை நியமிக்க, கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு ஊதியமாக, தினமும் 850 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், கலெக்டர் உத்தரவை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புறம் தள்ளி, தகுதியில்லாத மற்றும் ஆளுங்கட்சியினர் பரிந்துரை செய்வோருக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படுகின்றன.
மேலும், ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்களை நீக்கி விட்டு, அந்த இடத்திற்கு புதிதாக ஒருவரை நியமித்து வருகின்றனர்.
கடம்பத்துார், எல்லாபுரம், பூண்டி உள்ளிட்ட ஒரு சில ஒன்றியங்களில், ஏற்கனவே பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில், ஏராளமானோர் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்வோருக்கு மட்டுமே, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி நியமனம் செய்கின்றனர்.
மணவாளநகரைச் சேர்ந்த குமார் கூறியதாவது:
கடந்த 2007ம் ஆண்டு முதல், 18 ஆண்டுகள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வந்தேன். ஆரம்பத்தில், 50 ரூபாய் ஊதியமாக பெற்று வந்தேன். தற்போது, என்னை பணி நீக்கம் செய்து விட்டு, வேறு ஒருவரை நியமித்துள்ளனர்.
அதேபோல், என்னுடன் வேலை பார்த்த, 10க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ., ஒன்றிய செயலர் என, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பரிந்துரை செய்வோரை தான், அந்த பணிக்கு நியமிக்கப்படுகின்றனர்.
இதனால், இந்த வேலையை நம்பியிருந்த நானும், எனது குடும்பத்தினரும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவசாலிகளை நீக்க கூடாது ஒவ்வொரு ஒன்றியத்திலும், 10 ஆண்டுகளுக்கு மேல் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை, பணி நீக்கம் செய்வது நியாயமற்றது. ஏனெனில், அவர்கள் கொசு ஒழிப்பு பணியில், நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
தற்போது, புதிய பணியாட்களை நியமிப்பதால், அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும். இதை காரணமாக வைத்து, ஆளுங்கட்சியினரும், பரிந்துரை கேட்க வருவோரிடம், 15,000 ரூபாய் வசூலித்து, எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரை கடிதம் வழங்கி வருகின்றனர். சில இடங்களில், நிர்ணயிக்கப்பட்ட ஆட்களை விட, குறைந்த ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் பணியாட்கள் இருப்பதாக, போலியாக கணக்கு காண்பித்து, அவர்களின் ஊதியத்தை கையாடல் செய்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு, ஆளுங்கட்சியினர், மருத்துவ, ஒன்றிய அலுவலர்களும் உடந்தையாக உள்ளனர். கலெக்டர் ஆய்வு செய்து, முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - டி.ஸ்ரீதர், சமூக ஆர்வலர்கள், திருவள்ளூர்.