/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இறுதி கட்டத்தில் வாக்காளர்களுக்கு நெருக்கடி 2002 விபரம் தெரிவிக்க அதிகாரிகள் கெடுபிடி
/
இறுதி கட்டத்தில் வாக்காளர்களுக்கு நெருக்கடி 2002 விபரம் தெரிவிக்க அதிகாரிகள் கெடுபிடி
இறுதி கட்டத்தில் வாக்காளர்களுக்கு நெருக்கடி 2002 விபரம் தெரிவிக்க அதிகாரிகள் கெடுபிடி
இறுதி கட்டத்தில் வாக்காளர்களுக்கு நெருக்கடி 2002 விபரம் தெரிவிக்க அதிகாரிகள் கெடுபிடி
ADDED : டிச 10, 2025 06:24 AM
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பத்தில், 2002ம் ஆண்டு விபரங்களை, வாக்காளர்களே கண்டு பிடித்து தருமாறு, ஓட்டுச் சாவடி அலுவலர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர். கடைசி நேர நெருக்கடியால், படிவம் கொடுத்தவர்கள், தங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் விடுபட்டு விடுமோ என, அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணி, கடந்த, நவ.4 முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், 3,699 ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலம், விண்ணப்ப படிவத்தை வாக்காளர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.
பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவத்தை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணியில், தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விபரங்கள், பெரும்பாலான படிவங்களில் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக, பெறப்பட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலில் பூர்த்தி செய்ய முடியாமல், ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
இதையடுத்து, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களை தொடர்பு கொண்டு, 2002ம் ஆண்டு விவரங்களை கேட்டு வருகின்றனர்.
படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்ற நிலையில், இறுதிக்கட்டத்தில், தேர்தல் அலுவலர்கள் நெருக்கடி கொடுப்பதால், படிவத்தை பூர்த்தி செய்து அளித்தவர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என, அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாக்காளர்கள் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பத்தை அளித்த போது, ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள், 2002ம் ஆண்டு விபரம் தெரிந்தால் பூர்த்தி செய்யலாம்.
இல்லாவிட்டால், பூர்த்தி செய்யாமல், எங்களிடம் அளித்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர்.
தற்போது, 2002ம் ஆண்டு விபரங்களை கேட்டு, எங்களை தொடர்பு கொள்கின்றனர். படிவம் அளித்து, 20 நாட்கள் கடந்த நிலையில், கடைசி நேரத்தில் விடுபட்ட விபரங்களை அளிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
அந்த விபரங்களை அளிக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து எங்கள் பெயர் நீக்கப்பட்டு விடும் என, கூறுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

