/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே இ - மெயிலால் களமிறங்கிய அதிகாரிகள்சபாஷ் பி.எம்.ஓ.!:அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு
/
ஒரே இ - மெயிலால் களமிறங்கிய அதிகாரிகள்சபாஷ் பி.எம்.ஓ.!:அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு
ஒரே இ - மெயிலால் களமிறங்கிய அதிகாரிகள்சபாஷ் பி.எம்.ஓ.!:அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு
ஒரே இ - மெயிலால் களமிறங்கிய அதிகாரிகள்சபாஷ் பி.எம்.ஓ.!:அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு
ADDED : மே 23, 2024 12:15 AM

அம்பத்துார்:அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் பிரதான சாலையில், தீராத பிரச்னையாக இருந்த வாகன நெரிசலுக்கு, பிரதமர் அலுவலகத்தால் விடிவு கிடைத்துள்ளது. அச்சாலையில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். 20க்கும் அதிகமான கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன; 30 வாகனங்கள் அகற்றப்பட்டன. விதிமீறல் ஏற்படாமல் இருக்க, அயப்பாக்கம் சாலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.
சென்னை --- திருத்தணி நெடுஞ்சாலை மற்றும் அம்பத்துார் -- திருவேற்காடு பகுதிகளை இணைப்பது அயப்பாக்கம் பிரதான சாலை. தினம், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன.
இச்சாலையின் இருபுறமும் வணிக வளாகங்கள், மெக்கானிக், டீக்கடை உட்பட பல கடைகள் செயல்படுகின்றன. கடைகளுக்கு வருவோர், தங்களின் டூ - வீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, சாலையில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.
தவிர, கடைகளின் உரிமையாளர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து, தங்களது பொருட்களை வைப்பது, 'ராம்ப்' எனும் படிக்கட்டு அமைப்பது உள்ளிட்ட அடாவடி செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது போக்குவரத்தான மாநகர பேருந்து சேவை, அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் இடையூறு ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால், அவர்கள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், அவர்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இந்த பிரச்னைகளால் அவதிப்படும் அப்பகுதியினர், இது குறித்து, அம்பத்துார், கொரட்டூர், அம்பத்துார் தொழிற்பேட்டை சட்டம் -- ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தனர். இது குறித்து அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
கமிஷனர் உத்தரவு
அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அயப்பாக்கம் சாலையில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விபத்து அபாயம் குறித்து, பிரதமர் அலுவலகத்திற்கு இ -- மெயிலில் புகார் அளித்தார்.
இப்பிரச்னை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, தமிழக அரசின் பார்வைக்கு, பிரதமர் அலுவலகம் அப்புகாரை அனுப்பியது. அங்கிருந்து, சம்பந்தப்பட்ட ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றது.
கமிஷனர் சங்கர் உத்தரவின்படி உடனடியாக அங்கு சென்ற போக்குவரத்து போலீசார், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
மூன்று மணி நேர ஆய்வில், மொத்தமுள்ள 24 அடி அகல அயப்பாக்கம் பிரதான சாலையில், வாகன நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு மட்டும் 10 அடி அகலத்திற்கு இருந்துள்ளது.
குறிப்பாக, பிரச்னைக்கு உள்ளான டென்லப் மைதானம் அருகே இருந்து சுபாஷ் நகர் வரையிலான 1.5 கி.மீ., துாரத்திற்கு, சாலையோரம் வாகனங்களை நிறுத்தியது, மழைநீர் வடிகால் மீது தங்கள் கடைகளை விரிவுபடுத்தியிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, விபத்துக்கு காரணமாகும் ராம்ப் எனும் படிக்கட்டு அமைத்திருப்பது தெரிந்தது.
நோட்டீஸ்
இதையடுத்து, அங்கிருந்த வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், மெக்கானிக் கடைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களிடம், போக்குவரத்து போலீசார் பேச்சு நடத்தினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கடைகாரர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள, கடைகாரர்கள் இரு நாட்கள் அனுமதி கேட்டனர்.
இதையடுத்து, அச்சாலையில் இருந்த 30க்கும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மழைநீர் வடிகால் மீது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த 20க்கும் அதிகமான தள்ளுவண்டிகளையும், சாலையோர கடைகளையும் அகற்றினர். பந்தல், டேபிள் உள்ளிட்ட பொருட்களையும் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
சாலையில் இருந்து கடைகளுக்கு அமைத்திருந்த ராம்ப் எனும் படிக்கட்டுகளை, உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என, எச்சரித்து சென்றனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் நடந்து கொண்டால், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் எச்சரித்தனர்.
பிரதமர் அலுவலகத்தில் புகார் செய்ததால் தான், சட்டம் -- ஒழுங்கு சீராகும் என்ற நிலை உருவாகி உள்ளதாக, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
துணை போகும் அதிகாரிகள்
பிரதமர் அலுவலகத்தில் புகார் செய்த பின் தான், சாலை ஆக்கிரமிப்பிற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஒவ்வொரு பிரச்னைக்கும், முதல்வர் தனிப்பிரிவு, பிரதமர் அலுவலகம் என, புகார் செய்ய முடியுமா?
சென்னை -- திருத்தணி நெடுஞ்சாலை உட்பட, அம்பத்துார் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலையிலும் அரசியல் கட்சினரின் ஆதரவுடன், ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. அனுமதி பெறாத அரசியல் மற்றும் பல்வேறு இயக்கங்களின் கொடி கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ரமேஷ், 54,
அம்பத்துார்.
தொடர்ந்து கண்காணிப்பு
ஆவடி கமிஷனரகத்தில் இருந்து, அவசர நடவடிக்கையாக கவனிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக அயப்பாக்கம் சாலைக்கு சென்றோம். அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
பரந்தாமன்,
போக்குவரத்து இன்ஸ்பெக்டர், அம்பத்துார்.

