பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எல்லாத்துக்கும் ஒரே ஆளுதான்!
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் எல்லாத்துக்கும் ஒரே ஆளுதான்!
UPDATED : ஆக 03, 2026 10:33 PM
ADDED : ஆக 03, 2026 09:02 PM

திருத்தணி;திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகத்தில், ஒரே ஒரு உதவி பொறியாளர் மட்டுமே பணிபுரிந்து வருவதால், அரசு கட்டடங்கள், பள்ளி வகுப்பறைகள் பராமரிப்பது மற்றும் புதிய கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, காலி பணியிடங்களை நிரப்பாமல் அரசு கிடப்பில் போட்டுள்ள நிலையில், பணிகள் எப்படி தரமாக நடக்கும் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திருத்தணி - சித்துார் சாலையில், பொதுப்பணித்துறையின் கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் மூலம் தான், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகாக்களில் பொதுப்பணித்துறை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதாவது, 60 அரசு பள்ளிகள், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், மூன்று சார் - பதிவாளர் அலுவலகங்கள், இரு தீயணைப்பு நிலையங்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட அரசு கட்டடங்களை பராமரிப்பது, புதிய கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகள், இந்த அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த அலுவலகத்தில், ஒரு உதவி செயற்பொறியாளர், நான்கு உதவி பொறியாளர்கள், நான்கு பணி ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணியிடங்கள் உள்ளன.
ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி பொறியாளர் என, இருவர் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். மேலும், இருவர் தினக்கூலியாக, ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த உதவி செயற்பொறியாளர், வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
தற்போது, ஒரே ஒரு உதவி பொறியாளர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். இவரே, தினந்தோறும் அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அரசு கட்டடங்கள் பராமரிப்பு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தல், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் ஆய்வு கூட்டங்கள், புதிய கட்டட பணிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, இவர் ஒருவரே கவனிக்க வேண்டியுள்ளது. இதனால், உதவி பொறியாளர் கடும் பணிச்சுமையால் திணறி வருகிறார்.
இதனால், திருத்தணி வருவாய் கோட்டத்தில், அரசு கட்டட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.
உதாரணமாக, திருத்தணி கால்நடை மருந்தகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதே போல், திருத்தணி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை பராமரிப்பது, இடித்து அகற்றுவது போன்ற பணிகள், பல மாதங்களாக கிடப்பில் உள்ளன.
எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, திருத்தணி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'பொதுப்பணித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து, மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம். காலி பணியிடங்களை நிரப்புவது, அரசின் கொள்கை முடிவாகும்' என்றார்.
