/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 'டிட்வா' புயலால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின ... 5,412 ஏக்கர் நாசம்: மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் அதிக பாதிப்பு
/
திருவள்ளூரில் 'டிட்வா' புயலால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின ... 5,412 ஏக்கர் நாசம்: மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் அதிக பாதிப்பு
திருவள்ளூரில் 'டிட்வா' புயலால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின ... 5,412 ஏக்கர் நாசம்: மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் அதிக பாதிப்பு
திருவள்ளூரில் 'டிட்வா' புயலால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின ... 5,412 ஏக்கர் நாசம்: மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் அதிக பாதிப்பு
ADDED : டிச 06, 2025 06:27 AM

திருவள்ளூர் மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக, சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள, 5,412 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் அதிகம் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு, விவசாயிகள் இழப்பீடு கேட்டுள்ளனர். வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி, 33 சதவீதத்திற்கு மேல் நெற்பயிர் சேதமடைந்திருந்தால், நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், எல்லாபுரம், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஒன்றியங்களில், அதிகளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
சம்பா, சொர்ணவாரி மற்றும் நவரை ஆகிய பருவங்களில், ஆண்டு தோறும், 2.30 லட்சம் ஏக்கர் வரை, நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சம்பா பருவத்தில், 1.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், நெற் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக, மீஞ்சூர், எல்லாபுரம், சோழவரம் பகுதியில் மட்டும், 80,000 ஏக்கருக்கு மேல், சம்பா நெற் பயிர் பயிரிடப்பட்டு வருகிறது.
பராமரிப்பு
கடந்த நவ., முதல் நெற் பயிர் நடவு செய்து, பாத்தி கட்டி, களை எடுத்து, முறையாக பராமரித்து நிலையில் பயிர்கள் அனைத்தும் ஓரளவு வளர்ந்துள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த, அக்.16ம் தேதி துவங்கி, அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மழைநீர் சம்பா பயிர் நடவு செய்த விவசாய நிலங்களில் குளம் போல் தேங்கி உள்ளது.
இதற்கிடையே, 'டிட்வா' புயல் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுதும் கன மழை பெய்து வருகிறது.
மேலும், ஆந்திர மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருவதால், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் அணைக்கட்டுகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக, அந்த அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு, கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளில், உபரி நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இதன் காரணமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற் பயிர்கள் பல இடங்களில் மழைநீரில் மூழ்கி விட்டன.
குறிப்பாக, ஆரணி, கொசஸ்தலை ஆறு கடலில் கலக்கும் பகுதிகளான, சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், தற்போது மழைநீர் குளமாக தேங்கி உள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக, களையெடுத்து, உரமிட்டு பராமரித்து, நன்கு வளர்ந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து, பயிர் சேதம் குறித்து, ஆய்வு செய்து, கணக்கெடுப்பு நடத்தினர். இதில், இதுவரை, 5,412 ஏக்கர் பரப்பளவில் நீரில் மூழ்கியதாக தெரிய வந்துள்ளது.
பொன்னேரி தாலுக்காவிற்கு உட்பட்ட மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில் சம்பா பருவத்திற்கு, 45,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, சோழவரம் பகுதிகளில், தொடர் மழை பொழிவு இருந்தது. கடந்த, 1 - 4ம் தேதி வரை மட்டும் நான்கு நாட்களில், 40 செ.மீ., மழை பொழிந்தது.
கனமழையின் காரணமாக, பொன்னேரி தாலுக்காவிற்கு உட்பட்ட பனப்பாக்கம், பெரியகரும்பூர், சேகண்யம், மடிமைகண்டிகை, கங்காணிமேடு, தேவம்பட்டு, வாயலுார், நெடுவரம்பாக்கம் உள்ளிட்ட, பல்வேறு கிராமங்களில் நெற் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
ஒவ்வொரு விவசாய நிலத்திலும், 2- 4 அடிக்கு மழைநீர் தேங்கி இருப்பதால், நெற்பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன.
உடனடியாக மழைநீர் வடிவதற்கு வசதியில்லாத நிலையில், அவை அழுகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள், வருவாய் இழப்பிற்கு ஆளாகி வேதனை அடைந்துள்ளனர்.
கண்காணிப்பு
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ள கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வேளாண் துறை அலுவலர்களால், வருவாய்த் துறையுடன் இணைந்து ஆய்வு மூலம் 33 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் பயிர் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து இம்மாதம் இறுதி வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரத்தை விவசாயிகள் வட்டார வேளாண் அலுவலர்களுக்கும் தெரிவித்து, உரிய ஆலோசனை பெற்று, பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்-

