/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாடியநல்லூர் பா.ஜ., பிரமுகருக்கு குறி? துப்பாக்கியுடன் சிக்கிய கும்பலால் பீதி
/
பாடியநல்லூர் பா.ஜ., பிரமுகருக்கு குறி? துப்பாக்கியுடன் சிக்கிய கும்பலால் பீதி
பாடியநல்லூர் பா.ஜ., பிரமுகருக்கு குறி? துப்பாக்கியுடன் சிக்கிய கும்பலால் பீதி
பாடியநல்லூர் பா.ஜ., பிரமுகருக்கு குறி? துப்பாக்கியுடன் சிக்கிய கும்பலால் பீதி
ADDED : மார் 17, 2024 01:07 AM

சென்னை:சென்னை, திருமங்கலத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த ரவுடி கும்பலை, 13ம் தேதி இரவு, சென்னை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அதில், அரக்கோணத்தைச் சேர்ந்த, 'ஒற்றைக்கண்' ஜெயபால், 64, வேளச்சேரி பிரசன்னா, 30, துாத்துக்குடியை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி தம்பிராஜ், 54, உட்பட, 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து நான்கு துப்பாக்கி, 86 தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிலர் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
போலீசாரின் விசாரணையில், சென்னை அடுத்த செங்குன்றம், பாடியநல்லுாரைச் சேர்ந்த, பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலர் கே.ஆர்.வெங்கடேசனை, 'குறி' வைத்து ரவுடி கும்பல், ஹோட்டலில் கூடியது தெரியவந்தது.
கடந்தாண்டு, ஆக., 17ம் தேதி காலை, பாடியநல்லுார் ஊராட்சி முன்னாள் தலைவரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை இணை செயலருமான பார்த்திபன், 54, மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
செங்குன்றம் போலீசார் விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக, நல்லுாரைச் சேர்ந்த முத்து சரவணன் என்ற பிரபல ரவுடி, தன் கூட்டாளிகளுடன் அவரை கொலை செய்தது தெரிந்தது.
இந்த வழக்கில், 10 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்தாலும், முக்கிய குற்றவாளிகளான முத்து சரவணன், அவரது தம்பி கருப்பசாமி, ஞாயிறு சதீஷ், பாம் சரவணன் ஆகியோர் தலைமறைவாகினர். அக்., 12ம் தேதி அதிகாலை, தனிப்படை போலீசாரால் முத்து சரவணன், ஞாயிறு சதீஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள், போலீசாரிடம் சிக்குவதற்கு பா.ஜ., பிரமுகர் வெங்கடேசன் காரணம் என, ரவுடிகளின் கூட்டாளிகள் கருதினர்.
இதனால், வெங்கடேசனை பழி தீர்க்க, பாடியநல்லுார் அங்காள ஈஸ்வரி கோவில் பங்குனி உத்திர திருவிழாவை பயன்படுத்தி ரவுடி கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெங்கடேசன் வீட்டிற்கு ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.

